
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் 1000வது ஒருநாள் போட்டி இது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு ஜெர்சியில் கருப்புப்பட்டை அணிந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்தியாவின் பழம்பெரும் பாடகியான 92 வயது லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த ஜனவரி 8ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த அவர் உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு, வரலாற்று சிறப்புமிக்க இந்தியாவின் 1000வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்புப்பட்டை அணிந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி அவரை நினைவுகூர்ந்து டுவீட் செய்துள்ள பிசிசிஐ, லதா மங்கேஷ்கர் கிரிக்கெட்டை விரும்புபவர். கிரிக்கெட் விளையாட்டுக்கும், இந்திய அணிக்கும் அவர் எப்போதுமே ஆதரவாக இருந்தார் என்று பிசிசிஐ அவரை நினைவுகூர்ந்துள்ளது.