
Asia Cup 2025: India vs Pakistan: ஆசியக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா தொடக்க ஆட்டத்தில் யு.ஏ.இ அணியை செப்டம்பர் 10ம் தேதி எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை ஆறு விக்கெட்டுகளுக்கு வீழ்த்திய பிறகு, இரு அணிகளும் முதல் முறையாக மோதும் போட்டியாகவும் இது அமைகிறது.
ஆசியக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதல்
குரூப் சுற்றில் வெற்றி பெற்றால், சூப்பர் ஃபோரிலும் இரு அணிகளும் மோதும் வாய்ப்புகள் உள்ளன. இதேபோல் இறுதிப் போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழலில், ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் சாதனை எப்படி இருக்கிறது? என்பது குறித்து பார்ப்போம். ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானால் இதுவரை இந்தியாவை வீழ்த்த முடியவில்லை. இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பையிலும் இந்தியா ஆதிக்கம்
இதேபோல் டி20 உலகக் கோப்பையில் 2022-ல் பெற்ற ஒரே ஒரு வெற்றி மட்டுமே பாகிஸ்தானுக்கு உள்ளது. இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் 7; இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 1984-ல் தொடங்கிய ஆசியக் கோப்பையில் இதுவரை நடந்த 16 போட்டிகளில் 15ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கேற்றுள்ளன. 1986-ல் இலங்கையில் நடந்த ஆசியக் கோப்பையில் இலங்கையின் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இந்தியா விலகியது.
ஆசியக் கோப்பையின் கிங் இந்தியா
1990-91-ல் இந்தியாவில் நடந்த ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணித்தது. ஆசியக் கோப்பையில் அதிக முறை கோப்பையை வென்ற அணியும் இந்தியாதான். எட்டு முறை கோப்பையை வென்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையைப் போலவே, ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தானை விட இந்தியாவே ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளதா?
ஆசியக் கோப்பையில் இதுவரை 18 போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்தியா வென்றது, ஆறு போட்டிகளில் பாகிஸ்தான் வென்றது. இரண்டு போட்டிகள் முடிவில்லாமல் கைவிடப்பட்டன. 1984-ல் நடந்த முதல் ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் மோதிய போது, இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஒருநாள் போட்டி வடிவத்தில் நடந்த 2023 ஆசியக் கோப்பையில் இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1995ல் இந்தியாவை 97 ரன்களுக்கு வீழ்த்தியதுதான் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானின் மிகப்பெரிய வெற்றியாகும்/ 2022ல் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றதுதான் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானின் சமீபத்திய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.