India vs England 1st Test: இந்தியா முதலில் பேட்டிங்! சாய் சுதர்சன் அறிமுகம்! பிளேயிங் லெவன் என்ன?

Published : Jun 20, 2025, 03:29 PM ISTUpdated : Jun 20, 2025, 03:52 PM IST
India vs England Test Series

சுருக்கம்

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் தொடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. 

India vs England 1st Test! Indian Team Batting First: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பட்டோடி டிராபி தொடர் என்று இருந்த தொடர் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர் என மாற்றப்பட்டது. ஆனாலும் பட்டோடி பெயர் முழுமையாக தவிர்க்கப்படாமல் அவரது பெயரில் தொடரில் ஜொலிக்கும் வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்து முதல் டெஸ்ட்

இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 20ம் தேதி) லீட்ஸில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் தொடங்கியுள்ளது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார். இதேபோல் பல ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த கருண் நாயருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி

தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இடம் பிடித்துள்ளார். அனுபவ வீரர்கள் கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் களமிறங்குகின்றனர். பவுலிங்கை வலுப்படுத்தும் வகையில் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரும் அணியில் இடம்பிடித்துள்ளார். பாஸ்ட் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளனர். அனுபவ வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாத நிலையில், இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணி எப்படி?

இந்திய அணியில் பேட்டிங்கில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், கருண் நாயர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பாஸ்ட் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணாவும், ஸ்பின்னில் ரவீந்திர ஜடேஜாவும் அசத்த தயாராக உள்ளனர்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை டெஸ்ட்டிலும் அதிரடியாக ஆடக்கூடிய பென் டெக்கெட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் உள்ளனர். ஜோ ரூட் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். பவிலிங்கில் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்த காத்திருக்கின்றனர். இந்த அணியின் பாஸ்ட் பவிலிங்கை ஒப்பிடுகையில் இங்கிலாந்து பாஸ்ட் பவுலிங் பெரிய அளவில் பலம் இல்லை.

யார் எந்த வரிசையில் களமிறங்குகின்றனர்?

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்குகின்றனர். கருண் நாயர் 3வது இடத்திலும், சுப்மன் கில் 4வது இடத்திலும் களமிறங்க வாய்ப்புள்ளது. சாய் சுதர்சன் 5வது இடத்திலும் களமிறங்க உள்ளார். 6வது இடத்தில் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் களமிறங்குகிறார்.

ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா 7வது இடத்திலும், ஷர்துல் தாக்கூர் 8வது இடத்திலும் களம் காண்கின்றனர். 9வது இடத்தில் ஜஸ்பிரித் பும்ராவும், 10வது இடத்தில் முகமது சிராஜும், 11வது இடத்தில் பிரசித் கிருஷ்ணாவும் களமிறங்க உள்ளனர்.

டாஸ் இழந்த இந்தியா பேட்டிங்கில் அசத்துமா?

முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் லீட்ஸின் ஹெடிங்லின் பிட்சை பொறுத்தவரை முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் போகப் போக இரண்டாவது நாளில் இருந்து பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். ஆகவே பேட்ஸ்மேன்கள் களத்தில் சிறிது நேரம் பொறுமை காத்தால் ரன்கள் சேர்க்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் முதல் நாளில் சிறிது நேரம் பொறுமையுடன் செயல்பட்டால் பின்பு நன்றாக ரன்கள் குவிக்கலாம்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்:

சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கவுதம் கம்பீர் படை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி வீரர்களும், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் உள்ளனர். இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு வெற்றி பெற்றது கிடையாது. இந்த முறை இங்கிலாந்து மண்ணில் கவுதம் கம்பீர், சுப்மன் கில் படை வரவாறு படைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!