India vs South Africa: தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு செம சான்ஸ்

By karthikeyan VFirst Published Dec 28, 2021, 8:52 PM IST
Highlights

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக வெல்ல இந்த சுற்றுப்பயணம் அருமையான வாய்ப்பு.
 

1992ம் ஆண்டு முதல் 7 முறை தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி ஒருமுறை கூட தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. 6 முறை டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவில் தோற்றுள்ள இந்திய அணி, 2010-2011ம் ஆண்டில் மட்டும் 1-1 என டிரா செய்தது.

இந்திய அணியின் நடப்பு சுற்றுப்பயணம் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல அருமையான வாய்ப்பு. 2021ம் ஆண்டு முழுவதுமே இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரிஸ்பேன் டெஸ்ட் வெற்றியின் மூலம் ஆஸி., மண்ணில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் இந்தியாவில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிய இந்திய அணி, நியூசிலாந்திடம் அந்த அணியிடம் தோல்வியை தழுவினாலும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது. இதற்கிடையே இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடி 2 டெஸ்ட்டில் வெற்றி பெற்றது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுமையாக நடைபெறவில்லை. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி எஞ்சியுள்ளது.

2021ம் ஆண்டு முழுவதுமாகவே இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பானதாக இருந்திருக்கிறது. ஒருநாள் அணி கேப்டன்சியிலிருந்து கோலி நீக்கப்பட்டு, ரோஹித்திடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே சிறு பூசல் நிலவினாலும், அதையெல்லாம் கடந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.

விராட் கோலி - ரவி சாஸ்திரி ஜோடியின் வழிகாட்டுதலில் இந்திய அணி, ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான வெளிநாட்டு கண்டிஷன்களில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. அதற்கு ஆரம்பப்புள்ளியாக அமைந்தது, இந்திய அணியின் கடந்த 2017-2018 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தான். இந்திய அணியின் 2017-2018 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகிய இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் காம்போ, தென்னாப்பிரிக்க வீரர்களை தெறிக்கவிட்டது. அதுமுதல் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள், ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான கண்டிஷன்களில் எதிரணிகளை மிரட்டிவருகின்றனர். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் காயத்தால் விலகியதால், டாப் ஆர்டரில் இந்திய அணிக்கு மிகக்குறைவான ஆப்சனே உள்ளது. மிடில் ஆர்டரில் புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவருமே பெரிய ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிவருகின்றனர். எனவே மிடில் ஆர்டர் தான் இந்திய அணியின் பிரச்னையாக உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அபாரமாக ஆடி சதமும், அரைசதமும் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அனைத்து சவாலான கண்டிஷன்களிலும் அபாரமாக  ஆடி திறமையை வெளிப்படுத்தியிருக்கும் ஹனுமா விஹாரி ஆகியோரும் அணியில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் அந்த அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் ரபாடாவையே அதிகம் சார்ந்திருக்கிறது. ஏனெனில் அன்ரிக் நோர்க்யா காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகிவிட்டார். எனவே அந்த அணி ரபாடாவையே நம்பியிருக்கிறது. ஆனால் இந்திய அணி அப்படியில்லை. பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் என நல்ல கலவையிலான ஃபாஸ்ட் பவுலர்கள் உள்ளனர்.

எனவே இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Powered by Sky247

click me!