இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் ரத்து..? காரணம் இதுதான்

By karthikeyan VFirst Published Nov 26, 2021, 8:25 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் செல்லுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
 

டி20 உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிவருகிறது. இந்தியாவில் நடந்துவரும் கிரிக்கெட் தொடரில் டி20 தொடர் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3 முதல் 7 வரை மும்பை வான்கடேவில் நடக்கவுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 17ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் கலந்துகொள்வதற்காக, டிசம்பர் 7ம் தேதி நியூசிலாந்து தொடரை முடித்துவிட்டு, 8ம் தேதியே இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்வதாக இருந்தது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். உலக சுகாதார நிறுவனமும் இந்த வைரஸ் பரவலை உன்னிப்பாக கவனித்துவருகிறது. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுடனான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. 

எனவே இந்த வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்வது, வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்வது குறித்து இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இந்திய அரசின் அனுமதிக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.

ஒருவேளை தென்னாப்பிரிக்கா செல்வதென்றால், இந்திய அணி கடுமையான பயோ பபுளை பின்பற்றி கிரிக்கெட் ஆட வேண்டியிருக்கும்.
 

click me!