
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் நாளையுடன் (பிப்ரவரி 20) முடிவடையவுள்ள நிலையில், அதன்பின்னர் இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது.
இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது. முதலில் டி20 தொடரும், அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது. வரும் 24ம் தேதி இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி லக்னோவில் நடக்கிறது. வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அடுத்த 2 டி20 போட்டிகள் தர்மசாலாவிலும் நடக்கின்றன.
இலங்கைக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக எடுக்கப்பட்டுள்ளனர். இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங்கையும் பார்த்துக்கொள்வார். இந்த தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால், இஷான் கிஷன் முதன்மை விக்கெட் கீப்பராக ஆடுவார். ரிஷப் இல்லாததால் மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
விராட் கோலியும் இந்த தொடரில் ஆடவில்லை. கோலிக்கும் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. மிடில் ஆர்டர் வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா ஆகிய நால்வரும் எடுக்கப்பட்டுள்ளனர். கோலி ஆடாததால், தீபக் ஹூடா தவிர மற்ற மூவருக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
காயத்தால் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்களில் ஆடாத ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா, காயத்திலிருந்து மீண்டு, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவரைத்தவிர ஸ்பின்னர்களாக, சாஹல், குல்தீப் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெள்ளைப்பந்து அணிகளில் கம்பேக் கொடுத்த அஷ்வின், மீண்டும் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஆவேஷ் கான் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான்.