India vs Sri Lanka: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா..! தூக்கி எறியப்பட்ட ரஹானே, புஜாரா

By karthikeyan VFirst Published Feb 19, 2022, 4:59 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியிலிருந்து ரஹானே, புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஆடிவருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என வென்ற நிலையில், டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று பெற்று தொடரை வென்றுவிட்டது. கடைசி டி20 போட்டி நாளை (பிப்ரவரி 20) நடக்கிறது. 

அதன்பின்னர் இலங்கைக்கு எதிராக டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி ஆடுகிறது. வரும் 24ம் தேதி முதல் டி20 போட்டி லக்னோவிலும், அதன்பின்னர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் கடைசி 2 டி20 போட்டிகளும் நடக்கின்றன. மார்ச் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியிலும், மார்ச் 12ம் தேதி 2வது டெஸ்ட் பெங்களூருவிலும் தொடங்கி நடக்கும்.

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னர் நடக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவென்பதால், டெஸ்ட் அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்தவகையில், வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனான ரோஹித் சர்மவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இளம் வீரர்கள் ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் பிரியன்க் பன்சாலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட், கேஎஸ் பரத் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். ரிதிமான் சஹாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், பிரியன்க் பன்சால், விராட் கோலி, ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.
 

click me!