இதுக்காகவாவது கடைசி போட்டியில் தோற்றுவிட கூடாது!! கடும் நெருக்கடியில் இந்திய அணி

By karthikeyan VFirst Published Mar 13, 2019, 12:18 PM IST
Highlights

சொந்த மண்ணில் பெரும்பாலும் எந்த அணியும் முதல் 2 போட்டிகளில் வென்றதற்கு பிறகு எதிரணியை ஆதிக்கம் செலுத்த விட விரும்பாது; அனுமதிக்காது. ஆனால் ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விக்கு பிறகு வெகுண்டெழுந்துள்ளது. 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் 4 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் 2-2 என தொடர் சமநிலை அடைந்துள்ளது. இந்நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி டெல்லியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கும். இந்திய அணி இந்த போட்டியில் தோற்றால் மோசமான சம்பவத்துக்கு ஆளாக நேரிடும். 

சொந்த மண்ணில் நடக்கும் தொடரில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றும், அதன்பின்னர் 2 போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்றது இந்திய அணி. சொந்த மண்ணில் பெரும்பாலும் எந்த அணியும் முதல் 2 போட்டிகளில் வென்றதற்கு பிறகு எதிரணியை ஆதிக்கம் செலுத்த விட விரும்பாது; அனுமதிக்காது. ஆனால் ஆஸ்திரேலிய அணி தொடர் தோல்விக்கு பிறகு வெகுண்டெழுந்துள்ளது. 

இன்று டெல்லியில் நடக்கும் கடைசி போட்டிதான் தொடரை தீர்மானிக்கும் போட்டி. இந்திய அணி 2015ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை தோற்றதே இல்லை. டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியிடம் தோற்றதுதான் கடைசி. அதன்பின்னர் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழக்கவில்லை. 

இந்நிலையில், இன்றைய போட்டியில் தோற்றால் மூன்றரை ஆண்டுக்கு பிறகு தொடரை இழக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டில் முதல் 2 போட்டிகளில் தோற்ற பிறகு, அதிலிருந்து மீண்டெழுந்து தொடரை வென்ற அணிகள் இதுவரை நான்கே அணிகள் தான். தென்னாப்பிரிக்க அணி 2003ல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் 2016ல் இங்கிலாந்துக்கு எதிராகவும் வென்றுள்ளது. 2005ல் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் முதல் 2 போட்டிகளில் தோற்ற நிலையில் அதன்பின்னர் தொடர்ந்து வெற்றி பெற்று தொடரை வென்றது. 2005ல் வங்கதேச அணி ஜிம்பாப்வேவிற்கு எதிராக அப்படி வென்றது. 

இன்றைய போட்டியில் இந்திய அணி தோற்றால், ஆஸ்திரேலிய அணியும் இந்த பட்டியலில் இணையும். சொந்த மண்ணில் எதிரணியை தொடர் தோல்விகளுக்கு பிறகு வெகுண்டெழ அனுமதித்த அணிகளின் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் இந்திய அணி, மீண்டும் இடம்பெற்றுவிட கூடாது என்றால் இன்றைய போட்டியில் வென்றே தீர வேண்டும்.
 

click me!