உலக கோப்பைக்கு ராகுல் வேண்டாம்.. அந்த சீனியர் வீரரை கூட்டிட்டு போங்க!! முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 13, 2019, 10:57 AM IST
Highlights

ராகுலுக்கு பதில் சீனியர் வீரர் ஒருவரை உலக கோப்பை அணியில் எடுத்தால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும். 

அந்த 2-3 வீரர்களில் மாற்று தொடக்க வீரரும் ஒருவர். இந்திய அணியின் நிரந்தர தொடக்க ஜோடியாக ரோஹித் - தவான் ஜோடி திகழ்கிறது. நீண்டகாலமாக இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிவருகின்றனர். இந்திய அணிக்கு பல நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றனர். தொடக்க ஜோடியாக பல சாதனைகளையும் செய்துள்ளதோடு, புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர்.

அண்மைக்காலமாக தவான் ஃபார்மில் இல்லாததால் அவருக்கு பதிலாக ரோஹித்துடன் ராகுலை இறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து தனது இடத்தை யாரும் அசைக்க முடியாதபடி செய்துவிட்டார். ரோஹித்தும் தவானும் நிரந்தர தொடக்க ஜோடியாக திகழும் நிலையில், இப்போதைக்கு மாற்று தொடக்க வீரராக ராகுல் அணியில் உள்ளார். 

கேஎல் ராகுல் கடந்த ஆண்டின் இறுதியில் பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பிவந்தார். பின்னர் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவாக பேசிய சர்ச்சையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராகுல், சஸ்பெண்ட் ரத்துக்கு பிறகு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ள இந்தியா ஏ அணியில் இணைந்து, டிராவிட்டின் மிகச்சிறந்த ஆலோசனைகளை பெற்று புதிய மனிதனாகவும் புது வீரராகவும் தன்னம்பிக்கையுடன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். இதையடுத்து உலக கோப்பைக்கு அவர் தான் மாற்று தொடக்க வீரர் என்பது உறுதியானது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடாத ராகுலுக்கு நான்காவது போட்டியில் ராயுடுவுக்கு பதில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ராகுல் பெரிதாக ஆடவில்லை. இன்று நடக்க உள்ள கடைசி போட்டியிலும் ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராகுல் உலக கோப்பைக்கான மாற்று தொடக்க வீரராக அழைத்து செல்லப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், ராகுலுக்கு பதில் ரஹானேவை உலக கோப்பைக்கு அழைத்து செல்வது அணிக்கு நல்லது என முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஹானே இங்கிலாந்தில் நல்ல ரெக்கார்டுகளை வைத்துள்ளதோடு, தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவம் கொண்ட ரஹானே, மிடில் ஆர்டரிலும் ஆடக்கூடியவர். நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடிய நிலையில், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் படுமோசமாக சொதப்பினார். முதல் மூன்று போட்டிகளீல் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். 

இப்படியாக மிடில் ஆர்டர் சிக்கலும் இன்னும் தீராத நிலையில், ரஹானேவை உலக கோப்பை அணியில் எடுப்பதன் மூலம் இரண்டு சிக்கலுக்கு ஒரே தீர்வாக ரஹானே இருப்பார் என்பது வெங்சர்க்காரின் கருத்து. இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த ஃபீல்டரான ரஹானேவை காரணமேயில்லாமல் ஒதுக்கிவைத்திருப்பது அநீதி என வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். மாற்று தொடக்க வீரர் மற்றும் 4ம் வரிசை  என இரண்டு பேட்டிங் வரிசைகளிலும் ரஹானே சிறப்பாக ஆடக்கூடியவர். எனவே ராகுலுக்கு பதிலாக ரஹானேவை உலக கோப்பை அணியில் எடுக்க வேண்டும் என்று வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார். 

வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டை வைத்துள்ள ரஹானே, கடைசியாக 2018ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் ரஹானே ஆடவில்லை. இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் புறக்கணிக்கப்பட்டார் ரஹானே. 

நடப்பு ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக ரஹானேவை அணியில் எடுப்பது குறித்து பரிசீலித்துவருவதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். அதனால் இந்தியாவில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் ரஹானே சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரிலும் ரஹானே புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!