அணிக்கு பயனே இல்லாத தவானின் மற்றுமொரு இன்னிங்ஸ், கோலி அபாரம்.. டெத் ஓவர்களை விளாசி தள்ளிய ராகுல்.. ஆஸ்திரேலிய அணிக்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Jan 17, 2020, 5:32 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று ராஜ்கோட்டில் நடக்கும் இரண்டாவது போட்டியில் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 81 ரன்களை சேர்த்தனர். 44 பந்தில் 42 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா ஆட்டமிழக்க, அதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி சிறப்பாக ஆடினார். 

தவானும் கோலியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடி சீரான வேகத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 96 ரன்கள் அடித்த தவான், 4 ரன்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 90 பந்தில் 96 ரன்கள் அடித்த தவான், சதமடித்து, அதன்பின்னர் அணிக்காக விரைவில் 30-40 ரன்களை சேர்த்து கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கடந்த போட்டியை போலவே 15 ஓவர்கள் பேட்டிங் ஆடி பந்துக்கு நிகரான அல்லது குறைவான ஸ்கோர் அடித்து ஆட்டமிழக்கிறார். அவரது இன்னிங்ஸால் அணிக்கு எந்த பயனும் இருப்பதில்லை. 

Also Read - சுயநலத்தோட ஆடுன நிறைய வீரர்களை என் கெரியரில் பார்த்துருக்கேன்.. ஆனால் கோலி கிரேட்.. மனதார பாராட்டிய கம்பீர்

இந்த போட்டியிலும் அதேபோலவே பந்துக்கு நிகராக ரன் அடித்துவிட்டு ஆட்டமிழந்துவிட்டார். தனக்கு கிடைத்த நல்ல ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றி அணிக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யவில்லை. இதையடுத்து களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் மந்தமாக பேட்டிங் ஆடி 17 பந்தில் 7 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். வழக்கம்போலவே சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துகொண்டிருந்த கோலி, ஸாம்பாவின் பந்தை ஸ்டிரைட் திசையில் தூக்கியடிக்க, கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்ற அந்த பந்தை லாங் ஆஃபில் இருந்த ஃபீல்டர் பிடித்து களத்திற்குள் இருந்த ஸ்டார்க்கிடம் தூக்கிப்போட, ஸ்டார்க் அதை கேட்ச் பிடித்தார். இதையடுத்து கோலி 78 ரன்களில் ஆட்டமிழந்தார். 

மனீஷ் பாண்டே வெறும் 2 ரன்னில் நடையை கட்ட, முழு பொறுப்பையும் தனது தோள்களில் சுமந்த கேஎல் ராகுல், டெத் ஓவர்களில் அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். அதிரடியாக ஆடிய ராகுல், 38 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின்னர் முடிந்தவரை அடித்து ஆடிய ராகுல், 46,47,48வது ஓவர்களில் அடித்து ஆடினார். 52 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்த ராகுல், கடைசி ஓவரின் நான்காவது பந்தில் ரன் அவுட்டானார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை குவித்தது. ராகுலின் இன்னிங்ஸ் தான் முக்கியமானது. ராகுல் கடைசி ஓவர்களை அடித்து ஆடாவிட்டால், இந்த ஸ்கோர் கூட வந்திருக்காது. 

Also Read - ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபார சாதனை.. ஆம்லா, டெண்டுல்கரை அடித்து துவம்சம் செய்த தரமான சம்பவம்

33வது ஓவரிலேயே 200 ரன்களை அடித்துவிட்டது இந்திய அணி. எனவே பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில், 360-370 ரன்களை அடித்திருக்க வேண்டும். இந்திய அணிக்கு 20 ரன்கள் குறைவுதான். எனவே இதை கடினமான இலக்கு என்று கூறமுடியாது. சவாலான இலக்குதான். ஆனால் அடிக்க முடியாத இலக்கல்ல. இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவும் இருக்கும் என்பதால் இந்திய பவுலர்கள் கூடுதல் கவனத்துடனும் சிறப்பான திட்டத்துடனும் பந்துவீசியாக வேண்டும். இல்லையெனில், வார்னர், ஃபின்ச், ஸ்மித், லபுஷேன், டர்னர், அலெக்ஸ் கேரி என அதிரடியான மற்றும் தரமான பேட்டிங் ஆர்டரை கொண்ட ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்துவது கடினம்.

click me!