இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்கள் குவித்து 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் பேட்டிங் செய்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் குவித்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. முதல் நாள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் 2ஆவது நாளை தொடங்கிய நிலையில் ஜெய்ஸ்வால் 80 ரன்களில் ஆட்டமிழக்க, கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்த நிலையில், ஷ்ரேயாஸ் 35 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து சதத்தை நோக்கி சென்ற கேஎல் ராகுல் 87 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து ரவீந்திர ஜடேஜா மற்றும் கே எஸ் பரத் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். பரத் 41 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து அக்ஷர் படேல் களமிறங்கினார். ஜடேஜா மற்றும் படேல் இருவரும் கடைசியில் அதிரடி காட்ட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் குவித்தது. இதில், படேல் 35 ரன்னுடனும், ஜடேஜா 81 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் தான் ஜடேஜா கூடுதலாக 6 ரன்கள் சேர்த்த நிலையில், 87 ரன்களில் ஜோ ரூட் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ஜஸ்ப்ரித் பும்ராவும் ஆட்டமிழக்க, முகமது சிராஜ் களமிறங்கினார். ஜோ ரூட் ஹாட்ரிக் விக்கெட்டிற்கு முயற்சிக்க சிராஜ் தனது விக்கெட்டை இழக்காமல் காப்பாற்றினார். கடைசியாக அக்ஷர் படேல் 44 ரன்களில் ஆட்டமிழக்கவே இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ரன்கள் குவித்தது.
இதன் மூலமாக 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டாம் ஹார்ட்லி மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜாக் லீச் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து இங்கிலாந்து 190 ரன்கல் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.