
நாளை இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே ஆசிய கோப்பை 2025 போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஷுபம் திவேதியின் மனைவி ஐஷான்யா திவேதி, ‘‘பிசிசிஐ இந்த போட்டியை அங்கீகரித்திருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 குடும்பங்கள் மீது பிசிசிஐ உணர்ச்சிவசப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். நமது கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்கிறார்கள்? தேசியவாதிகளாக நாங்கள் கருதும் நமது கிரிக்கெட் வீரர்கள், இது குறித்து குரல் எழுப்பியிருக்க வேண்டும். கிரிக்கெட் நமது தேசிய விளையாட்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1-2 கிரிக்கெட் வீரர்களைத் தவிர, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று யாரும் கூற முன்வரவில்லை.
பிசிசிஐ துப்பாக்கி முனையில் விளையாட யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இந்திய வீரர்கள் அவர்கள் தங்கள் நாட்டிற்கான தங்கள் பொறுப்பைப் புரிந்துகொண்டு அதற்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அப்படி செய்யவில்லை. அந்த 26 குடும்பங்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்று ஸ்பான்சர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களிடம் நான் நேரடியாகக் கேட்க விரும்புகிறேன்.
இந்தப் போட்டிகளில் இருந்து வரும் வருவமானம் எங்கே பயன்படுத்தப்படும்? பாகிஸ்தான் அதை பயங்கரவாதத்திற்காக மட்டுமே செலவிடும். இது ஒரு பயங்கரவாத நாடு. நீங்கள் அவர்களுக்கு வருவாயை வழங்கி மீண்டும் நம்மைத் தாக்க அவர்களைத் தயார்படுத்துகிறீர்கள். பொதுமக்கள் அதைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் போட்டிகளைப் பார்க்கச் செல்லாதீர்கள். உங்கள் டிவியை அணைத்து வையுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர்பாக மேற்கத்திய இந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பு ஆட்சேபனை எழுப்பியுள்ளது. இந்த போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது எனக்கோரி, சோனி டிவி , பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கத்திய இந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.