
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் 44 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். சாஹிப்சாதா ஃபர்ஹான் 29 ரன் எடுத்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல் மற்றும் ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்பு 161 என்ற வெற்றி இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்தது. கேப்டன் ஜதீந்தர் சிங் (1), முகமது நதீம் (3), சுஃப்யான் மெஹ்மூத் (1) என முன்னணி வீரர்கள் ஒறை இலக்கத்தில் வெளியேறினார்கள். ஹம்மாத் மிர்சா 23 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 27 ரன்கள், ஆமிர் கலீம் 13 ரன்கள் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். 16.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஓமன் அணி 67 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப், சுஃபியான் முகீம், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பாகிஸ்தான் அணி தன்னுடைய அடுத்த ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.