தம்பி இப்படியே போயிட்டு இருந்தா நீங்க அவ்வளவுதான்.. இந்திய அணியின் 4 விக்கெட் காலி

By karthikeyan VFirst Published Jun 27, 2019, 5:37 PM IST
Highlights

கோலியும் ராகுலும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வேளையில், 48 ரன்கள் அடித்த ராகுலை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர்களான விஜய் சங்கரும் கேதர் ஜாதவும் ஏமாற்றமளித்தனர். 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ராகுலும் நிதானமாக தொடங்கினர். ஆறாவது ஓவரில் அதிரடியை ஆரம்பித்த ரோஹித் சர்மா, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் தனது டிரேட்மார்க் ஷாட்டான புல் ஷாட்டின் மூலம் ஒரு சிக்ஸர் விளாசினார்.  ரோஹித் சர்மாவின் தன்னம்பிக்கையான ஷாட், ரசிகர்களுக்கும் நம்பிக்கையளிக்க, ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து கோலியும் ராகுலும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வேளையில், 48 ரன்கள் அடித்த ராகுலை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர். இதையடுத்து 21வது ஓவரில் விஜய் சங்கர் களத்திற்கு வந்தார். கடந்த போட்டியில் நான்காவது வரிசையில் இறங்கி சரியாக ஆடாத விஜய் சங்கருக்கு மீண்டும் ஒருமுறை, அணியில் தனது இருப்பை நியாயம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால் இந்த போட்டியிலும் விஜய் சங்கர் சொதப்பிவிட்டார். சிங்கிள் ரொடேட் செய்ய முடியாமல் திணறிய விஜய் சங்கர், 19 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் அடித்து கீமார் ரோச்சின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் நீண்டகால பிரச்னையாக இருந்துவந்த 4ம் வரிசைக்கு தீர்வாக விஜய் சங்கர் பார்க்கப்பட்ட நிலையில், அந்த வரிசைக்கு மேலும் பிரச்னையாக விளங்குகிறார் விஜய் சங்கர். 

இதையடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவும் சோபிக்கவில்லை. கேதரும் 7 ரன்களில் ரோச்சின் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து 29வது ஓவரில் அணியின் ஸ்கோர் 140 ரன்களாக இருந்தபோது நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 

கோலியுடன் தோனி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இவர்கள் இருவரும் கடைசிவரை களத்தில் நின்று ஆட வேண்டிய கட்டாயத்தில் ஆடிவருகின்றனர். 

விஜய் சங்கர் இதேபோன்று தொடர்ச்சியாக சொதப்பிவந்தால், அணியில் அவருக்கான இடம் சந்தேகமாகிவிடும்.
 

click me!