சச்சின், யுவராஜின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது இந்தியா லெஜண்ட்ஸ்

By karthikeyan VFirst Published Mar 17, 2021, 11:02 PM IST
Highlights

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 தொடரின் அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை 12  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி20 தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகள் முன்னேறின. இன்று(புதன்கிழமை) நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 5.3 ஓவரில் 56 ரன்களை சேர்த்து கொடுத்தனர். 

17 பந்தில் 35 ரன் அடித்து சேவாக் ஆட்டமிழக்க, கைஃப் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சச்சின் டெண்டுல்கர், 42 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

யுவராஜ் சிங் மற்றும் யூசுஃப் பதான் ஆகிய 2 அதிரடி வீரர்களும், தாங்கள் ஆடிய காலத்தில் ஆடியதை போலவே அடி பிரித்து மேய்ந்தனர். 19வது ஓவரில் யுவராஜ் சிங் 4 சிக்ஸர்களை விளாசினார். கடைசி ஓவரிலும் 2 சிக்ஸர்களை விளாசினார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங் 20 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 49 ரன்களை குவிக்க, அதே 20 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் அடித்தார். இதையடுத்து 20 ஓவரில் 218 ரன்களை குவித்து 219 ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்தது இந்தியா லெஜண்ட்ஸ் அணி.

இதையடுத்து 219 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் ட்வைன் ஸ்மித் அதிரடியாக ஆடி 36 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 63 ரன்களை குவித்தார். மற்றொரு தொடக்க வீரரான வில்லியம் பெர்கின்ஸ் வெறு 9 ரன்னில் ஆட்டமிழந்தார். 4ம் வரிசையில் இறங்கிய கிர்க் எட்வர்ட்ஸ் டக் அவுட்டானார்.

கேப்டன் பிரயன் லாராவும் அடித்து ஆட, கடைசி 2 ஓவரில் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 25 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்படியான இக்கட்டான கட்டத்தில் 19வது ஓவரை வீசிய வினய் குமார், அந்த ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி கொடுத்தார். அதிரடியாக ஆடி 27 பந்தில் 46 ரன்கள் அடித்திருந்த லாராவை 19வது ஓவரில் வீழ்த்திய வினய் குமார், பெஸ்ட்டை 2 ரன்னில் வீழ்த்தி, அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதையடுத்து கடைசி ஓவரில் 17 வெஸ்ட் இண்டீஸூக்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை வீசிய இர்ஃபான் பதான் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 206 ரன்களில் வெஸ்ட் இண்டீஸை சுருட்ட உதவினார். இதையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியது.
 

click me!