
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ஆர்டரை சாஹலும் வாஷிங்டன் சுந்தரும் இணைந்து சரித்தனர். 79 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டநிலையில், அதன்பின்னர் ஜேசன் ஹோல்டரும் ஃபேபியன் ஆலனும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 78 ரன்களை சேர்த்தனர்.
ஃபேபியன் ஆலனை 29 ரன்களில் வீழ்த்தி சுந்தர் பிரேக் கொடுக்க, எஞ்சிய 2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
177 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 51 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 60 ரன்கள் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் இஷான் கிஷனும் இணைந்து 84 ரன்களை குவித்தனர். ரோஹித் ஆட்டமிழந்த அதே ஓவரிலேயே விராட் கோலியையும் 8 ரன்னில் வீழ்த்தினார் அல்ஸாரி ஜோசஃப்.
இஷான் கிஷன் 28 ரன்னிலும், ரிஷப் பண்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் (34*) தீபக் ஹூடாவும் (26*) இணைந்து பொறுப்புடன் ஆடி இலக்கை எட்டினர். 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.