India vs Sri Lanka: இரண்டரை நாளில் முடிந்த பகலிரவு டெஸ்ட்! 2வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்ற இந்தியா

By karthikeyan VFirst Published Mar 14, 2022, 6:10 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. அந்த போட்டியில் அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

2வது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்தது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே அபாரமாக பேட்டிங் ஆடி 92 ரன்களை குவித்தார். ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால், மற்ற வீரர்கள் அனைவரும் அந்த சவாலை எதிர்த்து திறம்பட ஆடமுடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தடுப்பாட்டம் ஆடாமல் அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது. பும்ரா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில், இந்த இன்னிங்ஸிலும் ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 28 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். ரிஷப் பண்ட் 50 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களும் அடிக்க, ரோஹித் சர்மா 46 ரன்கள் அடித்திருந்தார். 2வது இன்னிங்ஸில் 303 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி.

447 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் நன்றாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவர் களத்தில் நிலைக்கவில்லை. 54 ரன்களில் குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் அனைவருமே ஒருமுனையில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டனும் தொடக்க வீரருமான திமுத் கருணரத்னே மட்டும் நிலைத்து நின்று சிறப்பாக பேட்டிங் ஆடினார்.

ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளத்தில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் ஆகிய தரமான ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு பேட்டிங் ஆடி சதமடித்த கருணரத்னேவை 107 ரன்களில் பும்ரா வீழ்த்த, எஞ்சிய 3 விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததால், 208 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
 

click me!