#SLvsIND பவுலிங்கில் பட்டைய கிளப்பிய புவனேஷ்வர் குமார்..! இலங்கையை பொட்டளம் கட்டி இந்திய அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jul 26, 2021, 8:26 AM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புவனேஷ்வர் குமாரின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். 3ம் வரிசையில் இறங்கி கேப்டன் தவானுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், அதிரடியாக ஆடி 20 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

நன்றாக ஆடிய கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்னில் வெளியேறினார். 4ம் வரிசையில் இறங்கி அடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 34 பந்தில் 50 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழக்க, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய ஹர்திக் பாண்டியா இந்த போட்டியிலும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இஷான் கிஷன் 14 பந்தில் தன் பங்கிற்கு 20 ரன்களை சேர்த்து கொடுக்க, 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த இந்திய அணி, 165 ரன்கள் என்ற இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது. 

இதையடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர் மினோத் பானுகாவை 10 ரன்னில் க்ருணல் பாண்டியா வெளியேற்ற, மற்றொரு தொடக்க வீரரான அவிஷ்கா ஃபெர்னாண்டோவை  26 ரன்னில் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். தனஞ்செயா டி சில்வா 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நன்றாக ஆடிய அசலங்காவை 44 ரன்னில் தீபக் சாஹர் வீழ்த்தினார். ஆஷன் பண்டாராவை 9 ரன்னில் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார். இதையடுத்து ஹசரங்காவை(0) தீபக் சாஹரும், சாமிகா கருணரத்னேவை(3) புவனேஷ்வர் குமாரும் வீழ்த்தினர். 

கேப்டன் ஷானுகா 16 ரன்கள் அடித்திருந்த நிலையில், இலங்கை அணிக்கு இருந்த அந்த ஒரே நம்பிக்கையையும் இந்திய அறிமுக பவுலரான வருண் சக்கரவர்த்தி சிதைத்தார். இதையடுத்து கடைசி 2 வீரர்களையும் 19 ஓவரில் புவனேஷ்வர் குமார் வீழ்த்த 18.3 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. இதையடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிக்காத இந்திய சீனியர் பவுலர் புவனேஷ்வர் குமார், இந்த போட்டியில், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தான் யார் என்பதை நிரூபித்ததுடன், செம கம்பேக் கொடுத்துள்ளார்.
 

click me!