எங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் ஒரு டார்கெட்டா..? இலங்கையை ஈசியா வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 8, 2020, 9:46 AM IST
Highlights

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி இந்தூரில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகிய இருவரும் அதிரடியாக தொடங்கினர். பவர்ப்ளேயில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை வாஷிங்டன் சுந்தர் 5வது ஓவரில் பிரித்தார். 

ஃபெர்னாண்டோவை 22 ரன்களில் சுந்தர் வீழ்த்த, அதன்பின்னர் களத்திற்கு வந்த குசால் பெரேரா அதிரடியாக ஆடினார். இரண்டாவது விக்கெட்டாக மற்றொரு தொடக்க வீரரான குணதிலகாவை நவ்தீப் சைனி போல்டு செய்து அனுப்பினார். அதன்பின்னர் இலங்கை வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பெரிய ஸ்கோர் அடித்து பெரிய டார்கெட்டை இந்திய அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி பெரிய ஷாட் ஆடமுயன்று அனைவரும் ஆட்டமிழந்தனர். 

ஒஷாடா ஃபெர்னாண்டோ 10 ரன்களில் ஆட்டமிழக்க, நன்றாக ஆடிக்கொண்டிருந்த குசால் பெரேராவும் 34 ரன்களில் அவுட்டானார். குசால் பெரேராவை குல்தீப் யாதவ் தனது சுழலில் வீழ்த்தினார். அதன்பின்னர் ராஜபக்‌ஷா, ஷனாகா, தனஞ்செயா டி சில்வா ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பும்ரா வீசிய கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளையும் ஹசரங்கா பவுண்டரி அடிக்க, இலங்கை அணி 142 ரன்கள் அடித்தது. 

143 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுலும் தவானும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ராகுல் அதிரடியாக ஆட, தவான் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிங்கிள் எடுத்து கொடுத்தார். தவானுக்கு ஷாட் சரியாக கனெக்ட் ஆகவில்லை. அதனால் ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வேலையை மட்டும் பார்த்தார். ராகுல் அடித்து ஆடி, 32 பந்தில் 45 ரன்கள் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 71 ரன்களை குவித்தனர். 

மூன்றாம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் அனுப்பப்பட்டார். அவர் தன் பங்கிற்கு 26 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அவர் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிய விராட் கோலியுடன், கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஒரு ரன் அடித்தார். சிக்ஸர் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார் கோலி. 

18வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இதையடுத்து 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி வரும் 10ம் தேதி நடக்கவுள்ளது. 
 

click me!