முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா ஆதிக்கம்

By karthikeyan VFirst Published Oct 6, 2019, 2:14 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 317 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 176 ரன்களையும் மயன்க் அகர்வால் 215 ரன்களையும் குவித்தனர். ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 502 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின், விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிய எல்கர் சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய கேப்டன் டுப்ளெசிஸ் 55 ரன்களை அடித்தார். எல்கர் மற்றும் டி காக் ஆகிய இருவரும் சதமடித்தனர். எல்கர் 160 ரன்களையும் டி காக் 111 ரன்களையும் குவித்தனர். எல்கர், டி காக், டுப்ளெசிஸ் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களை குவித்தது. 

71 ரன்கள் முன்னிலையுடன் நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தின் காலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நான்காம் நாள் ஆட்டத்தின் மாலையில் தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் ஆடவிட வேண்டும் என்பதால், முடிந்தவரை விரைவில் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆடியது. ரோஹித்தும் புஜாராவும் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தனர். புஜாரா 81 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்த ரோஹித் சர்மா 127 ரன்களை குவித்தார். அதன்பின்னர் ஜடேஜா, கோலி, ரஹானே ஆகியோரும் அடித்து ஆடி விரைவாக ஸ்கோரை உயர்த்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் 323 ரன்களை குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான வீரரான டீன் எல்கரை நேற்றே வீழ்த்திவிட்டார் ஜடேஜா. நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் அடித்திருந்தது தென்னாப்பிரிக்க அணி. 

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை மார்க்ரமும் டி ப்ருய்னும் தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அஷ்வின், அந்த ஓவரில் டி ப்ருய்னை வீழ்த்தினார். இது அஷ்வினின் 350வது டெஸ்ட் விக்கெட். 

டி ப்ருய்னின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதை அடுத்து, பவுமா, டுப்ளெசிஸ் மற்றும் டி காக் ஆகிய மூவரையும் கிளீன் போல்டு செய்து அனுப்பினார் ஷமி. 60 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிவந்த மார்க்ரமை ஜடேஜா அவரே பந்துவீசி அவரே அபாரமான கேட்ச்சையும் பிடித்து வெளியேற்றினார். 

அதே ஓவரில் ஃபிளாண்டர் மற்றும் கேசவ் மஹாராஜையும் டக் அவுட் செய்து அனுப்பினார் ஜடேஜா. ஒரே ஓவரில் மார்க்ரம், ஃபிளாண்டர் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய மூவரையும் அவுட்டாக்கி திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஜடேஜா. 70 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட தென்னாப்பிரிக்க அணியில், முத்துசாமியும் டேன் பீட்டும் இணைந்து அபாரமாக ஆடி இந்திய அணியை கடுப்பேற்றினர். 

முத்துசாமியும் பீட்டும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்தனர். இந்திய அணியின் பவுலிங்கை சிறப்பாக சமாளித்து ஆடிய பீட் அரைசதம் அடித்தார். முத்துசாமியும் நன்றாக ஆடினார். இருவரும் இணைந்து 32 ஓவர்கள் பேட்டிங் ஆடி இந்திய அணியை மிரட்டினர். ஒருவழியாக அரைசதம் அடித்த பீட்டை ஷமி 56 ரன்களில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ரபாடாவையும் ஷமியே வீழ்த்தினார். 191 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானதை அடுத்து 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்த போட்டியில் வென்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இது மூன்று போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கீட்டின்படி, ஒரு போட்டியில் வென்றால் 40 புள்ளிகள். எனவே 40 புள்ளிகளை பெற்ற இந்திய அணி 160 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டிலுமே வென்றதால் 120 புள்ளிகளை பெற்றிருந்த இந்திய அணி, இந்த 40 புள்ளிகளுடன் சேர்த்து 160 புள்ளிகளை பெற்றுள்ளது. 

click me!