U19 World Cup: ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி 5வது முறையை அண்டர் 19 உலக கோப்பையை வென்றது இந்தியா

Published : Feb 06, 2022, 06:32 AM IST
U19 World Cup: ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி 5வது முறையை அண்டர் 19 உலக கோப்பையை வென்றது இந்தியா

சுருக்கம்

அண்டர் 19 உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5வது முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்றது இந்திய அணி.  

அண்டர் 19 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடந்தது. இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. ஆண்டிகுவாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேகப் பெதெல்(2),  கேப்டன் டாம் ப்ரெஸ்ட்(0), வில்லியம் லக்ஸ்டான் (4), ஜார்ஜ் பெல் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஜார்ஜ் தாமஸ் 27 ரன்கள் அடித்தார்.

மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 91 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜேம்ஸ் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 8வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் ரியூவும் ஜேம்ஸ் சேல்ஸும் இணைந்து 93 ரன்களை சேர்த்தனர். அபாரமாக ஆடிய ஜேம்ஸ் ரியூ 95 ரன்களில் ஆட்டமிழந்து 5 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் கடைசி 2 விக்கெட்டுகளை இந்திய அணி எளிதாக வீழ்த்த, 189 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ராஜ் பவா 5 விக்கெட்டுகளையும், ரவி குமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 190 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ஷைக் ரஷீத் மற்றும் நிஷாந்த் சிந்து ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ராஜ் பவா மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி 35 ரன்கள் அடித்தார். நிஷாந்த் சிந்து கடைசிவரை களத்தில் நின்று அரைசதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 48வது ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5வது முறையாக அண்டர்19 உலக கோப்பையை வென்றது.

இதற்கு முன் 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் அண்டர் 19 உலக கோப்பையை வென்றுள்ள இந்திய அணி, 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை ஃபைனலில் வங்கதேசத்திடம் தோற்று கோப்பையை இழந்தது இந்திய அணி. அந்த காயத்திற்கு மருந்தாக இம்முறை கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி