#INDvsENG அறிமுக போட்டியிலேயே இஷான் கிஷன் அதிரடி அரைசதம்; விராட் கோலி செம கம்பேக்..! இந்தியா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 14, 2021, 10:59 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய அணி 2 மாற்றங்களுடன் இந்த போட்டியில் களமிறங்கியது. தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக அறிமுக வீரர் இஷான் கிஷனும், அக்ஸர் படேலுக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை 3வது பந்திலேயே புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடிய 35 பந்தில் 46 ரன்கள் அடித்தார். ஆனால் கடந்த போட்டியை போலவே அவரை இந்த போட்டியிலும் அரைசதம் அடிக்கவிடாமல் இந்திய அணி வீழ்த்தியது. ஜேசன் ராயை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.

மாலன் 23 பந்தில் 24 ரன்னுக்கு அவுட்டானார். 15 பந்தில் 20 ரன் அடித்த பேர்ஸ்டோவை சுந்தர் வீழ்த்த, கேப்டன் மோர்கனை 28 ரன்னில் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். 21 பந்தில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே திணறிய பென் ஸ்டோக்ஸை கடைசி ஓவரில் ஷர்துல் தாகூர் 24 ரன்களுக்கு வீழ்த்த, 20 ஓவரில் 164 ரன்கள் மட்டுமே அடித்தது இங்கிலாந்து அணி.

165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக, அறிமுக வீரரான இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். கோலியும் இஷான் கிஷனும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 9 ஓவரில் 94 ரன்களை குவித்தனர்.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 56 ரன்களை விளாசி இஷான் கிஷன் ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் டக் அவுட்டான இந்திய கேப்டன் விராட் கோலி, இந்த போட்டியில் அடி வெளுத்து வாங்கினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கோலி, 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி அதிரடி அரைசதத்துடன், ரிஷப் பண்ட்டின் கேமியோ ரோலால்(13 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 26 ரன்கள்) 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து டி20 தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
 

click me!