#AUSvsIND ஆஸி.,க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி

By karthikeyan VFirst Published Dec 2, 2020, 5:29 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கான்பெராவில் இன்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கோலியின் அரைசதம்(63), ஹர்திக் பாண்டியா(76 பந்தில் 92 ரன்கள்) மற்றும் ஜடேஜாவின்(50 பந்தில் 66 ரன்கள்) அதிரடியால் ஐம்பது ஓவரில் 302 ரன்களை குவித்தது இந்திய அணி.

303 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக தொடக்க வீரர் மார்னஸ் லபுஷேனை 7 ரன்களுக்கு நடராஜன் வீழ்த்த, ஸ்டீவ் ஸ்மித்தை 7 ரன்களுக்கு ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். ஹென்ரிக்ஸும் தாகூரின் பந்தில் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ஃபின்ச், 75 ரன்களுக்கு ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின்னர் அலெக்ஸ் கேரி 38 ரன்கள் அடித்து நடையை கட்டினார். ஆஸ்திரேலிய அணியின் ஃபினிஷர் மேக்ஸ்வெல், முதல் 2 போட்டிகளில் ஆடியதை போலவே இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார். அவரது அதிரடியால் கடைசி சில ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு தேவைப்படும் ரன்ரேட் 10 என்ற அளவிலேயே இருந்தது. அதனால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அந்த நம்பிக்கையை பும்ரா தகர்த்தார். 37 பந்தில் 59 ரன்கள் அடித்திருந்த மேக்ஸ்வெல்லை பும்ரா வீழ்த்தினார்.

அதன்பின்னர் ஆட்டம் மீண்டும் இந்தியாவின் பக்கம் திரும்பியது. மேக்ஸ்வெல்லின் விக்கெட்டுக்கு பிறகு அஷ்டன் அகர், சீன் அபாட், ஆடம் ஸாம்பா ஆகியோரும் அவுட்டாக, 49.3 ஓவரில் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி. இதையடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது இந்திய அணி.
 

click me!