
India vs England 1st Test! India All 0ut For 471 Runs: இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 359 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 16 பவுண்டரி, 1 சிக்சர்களுடன் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பண்ட் 102 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ரிஷப் பண்ட் சதம்
இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இருவரும் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். சுப்மன் கில் கொஞ்சம் பொறுமையாக ஆட, ரிஷப் பண்ட் அதிரடியான ஷாட்களை அடித்தார். தொடர்ந்து இந்த ஜோடி மிகச்சிறப்பாக விளையாடிய நிலையில், ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7வது சதத்தை விளாசினார். 146 பந்துகளில் சதம் விளாசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார்.
சுப்மன் கில் கேட்ச்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி 6 சதங்கள் அடித்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் தோனியின் சாதனையை முறியடித்து சாதனை படைத்தார். மறுபக்கம் கேப்டன் சுப்மன் கில் 150 ரன்களை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 227 பந்தில் 147 ரன்கள் எடுத்து சோயிப் பஷிர் பந்தில் கேட்ச் ஆனார். இதனைத் தொடர்ந்து சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர் பேட்டிங் செய்ய வந்தார்.
கருண் நாயர் ஏமாற்றம்
நன்றாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கருண் நாயர் பென் ஸ்டோக்ஸின் பந்தில் ஆலி போப்பின் சூப்பர் கேட்ச்சில் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட் ஆனார். இதன்பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. அருமையாக விளையாடிய ரிஷ்ப் பண்ட் 134 ரன்கள் எடுத்திருந்தபோது ஜோஷ் டாங்கே பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் ஆனார்.
இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட்
மேலும் ஜஸ்பிரித் பும்ரா (0), ரவீந்திர ஜடேஜா (11), பிரசித் கிருஷ்ணா (1) என நமது வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 430/4 என நல்ல நிலையில் இருந்த இந்திய அணி கடைசி 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் டாங்கே விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
2வது நாளில் முழுமையாக மாறிய பிட்ச்
முதல் நாளில் போட்டி நடக்கும் ஹெடிங்கில் வெயில் அடித்ததால் பந்து எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை. இதேபோல் பவுன்சும் சுத்தமாக இல்லை. பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் துரிதமாக ரன்கள் சேகரித்தனர். ஆனால் 2வது நாளில் முதல் செஷனுக்கு பிறகு மேகமூட்டம் சூழ்ந்தது. இதனால் பிட்ச்சில் ஓரளவு ஸ்விங் கிடைத்தது. இதை இங்கிலாந்து பவுலர்கள் சரியாக பயன்படுத்தி இந்திய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தனர்.
இந்திய பாஸ்ட் பவுலர்களுக்கு சாதகம்
இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. 2வது நாளில் பிட்ச் முழுமையாக பவுலிங்குக்கு சாதகமாக மாறிய நிலையில், இது இந்திய அணியின் பாஸ்ட் பவுலர்களுக்கு நல்ல விஷயமாகும். பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்னா பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாற அதிக வாய்ப்புள்ளது.