
Karun Nair Duck Out On ComeBack Match: இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 359 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் நடந்த நிலையில், கேப்டன் சுப்மன் கில் 227 பந்தில் 147 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
கருண் நாயர் டக் அவுட்
இதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7வது சதம் விளாசிய ரிஷப் பண்ட் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 134 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சுப்மன் கில் அவுட் ஆன உடன் இந்திய வீரர் கருண் நாயர் பேட்டிங் செய்ய வந்தார். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கருண் நாயர் சிறப்பாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
ரசிகர்கள் சோகம்
அதாவது பென் ஸ்டோக்ஸ் பந்தை அவர் கவர் டிரைவ் மூலம் பவுண்டரி அடிக்க முயன்றார். ஆனால் அந்த பந்தை பந்தை ஷார்ட் கவரில் நின்ற ஆலி போப் பாய்ந்து பிடித்து கேட்ச் செய்தார். இதனால் கருண் நாயர் ஏமாற்றம் அடைந்தார். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்களும், டிவியில் போட்டியை பார்த்த ரசிகர்களும் சோகம் அடைந்தனர்.
வீரேந்திர சேவாக்குக்குப் பிறகு சாதனை
8 ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் கருண் நாயர் மீண்டும் இடம் பிடித்தார். வீரேந்திர சேவாக்குக்குப் பிறகு இந்தியாவுக்காக டெஸ்டில் மும்மடங்கு சதம் அடித்த ஒரே வீரர் அவர் தான். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய கருண் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
சாய் சுதர்சன் நேற்று ஏமாற்றம்
ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆறாவது இடத்தில் களமிறங்கிய கருண் நாயர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதேபோல் நேற்று இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் 4 பந்தில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்த இருவரது ஆட்டத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இருவருமே டக் அவுட் ஆனது அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருவருக்கும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை என ரசிகர்கள் தெரிவித்தனர்.
கருண் நாயரின் விடாப்பிடியான போராட்டம்
கருண் நாயர் கடந்த 2016ல் நவம்பர் மாதம் மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம் கிடைக்க தொடர்ந்து போராடி வந்தார். கடந்த ஆண்டு முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி அவரது வாழ்க்கையையே மாற்றியது எனலாம்.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஆறு இன்னிங்ஸ்களில் 177 ஸ்ட்ரைக் ரேட்டில் 255 ரன்கள் எடுத்தார் நாயர். விஜய் ஹசாரே டிராபியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அங்கு அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 542 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் இந்திய அணியில் அவர் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.