என் மெசேஜுக்கு ரிப்ளையே பண்ணல.. என்னை உதவாக்கரைனு நெனச்சு தூக்கி போட்டுட்டாங்க..! இம்ரான் தாஹிர் வேதனை

By karthikeyan VFirst Published Sep 11, 2021, 6:48 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார் சீனியர் ஸ்பின்னரான இம்ரான் தாஹிர்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, கடந்த 9ம் தேதி அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ஜோர்ன் ஃபார்ச்சூன், ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளாசன், கேஷவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷாம்ஸி, ராசி வாண்டெர் டசன்.

ரிசர்வ் வீரர்கள் - ஜார்ஜ் லிண்டே, அண்டில் ஃபெலுக்வாயோ, லிஸாட் வில்லியம்ஸ்.

தென்னாப்பிரிக்க அணியில் ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய 2 சீனியர் வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. டி20 உலக கோப்பைக்கு தயாராவதற்காகவே, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற டுப்ளெசிஸுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. 

அதேபோலவே சீனியர் ஸ்பின்னரான இம்ரான் தாஹிருக்கும் அணியில் கிடைக்கவில்லை. 10 ஆண்டுகள் தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடியுள்ள தனக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்காதது குறித்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் இம்ரான் தாஹிர்.

இதுகுறித்து பேசிய இம்ரான் தாஹிர், கிரேம் ஸ்மித் என்னை தொடர்புகொண்டு டி20 உலக கோப்பையில் நான் ஆட வேண்டும் என்று கூறினார். நான், தயார் என்றேன். டிவில்லியர்ஸ் மற்றும் டுப்ளெசிஸ் ஆகியோரையும் தொடர்புகொண்டு அவர்களை ஆடவைப்பது குறித்து பேசவுள்ளதாக தெரிவித்தார். ஆனால் மார்க் பவுச்சர் பயிற்சியாளரான பிறகு என்னை தொடர்புகொள்ளவே இல்லை. ஸ்மித் மற்றும் பவுச்சருக்கு நான் அனுப்பிய மெசேஜுக்கு பதிலே இல்லை. நான் தென்னாப்பிரிக்க அணிக்காக 10 ஆண்டுகள் ஆடியிருக்கிறேன். மற்ற வீரர்களை விட நான் கொஞ்சம் கூடுதல் தகுதியானவன். ஆனால் என்னை உதவாக்கரை என நினைத்துவிட்டனர் என இம்ரான் தாஹிர் வேதனை தெரிவித்துள்ளார்.

இம்ரான் தாஹிர் 2013ம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்க அணியில் டி20 கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். 38 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இம்ரான் தாஹிர், உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் அபாரமாக ஆடி பல அணிகளின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்துவருகிறார்.
 

click me!