
இந்திய முன்னாள் வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இன்று நடந்த ஐஎல்டி20 சீசன் 4 ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் விற்கப்படாமல் போனார். ஆகஸ்ட் மாதம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு, அஸ்வின் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடிவு செய்து, ஐஎல்டி20-யின் நான்காவது சீசன் ஏலத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார்.
அவர் US$120,000 அடிப்படை விலையுடன் ஏலத்தில் நுழைந்தார். ஆனால் ஏலத்தின் ஐந்தாவது சுற்றுக்குப் பிறகும் எந்த அணியும் அவரை வாங்க முன்வரவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், சிஎஸ்கே அவரை ரூ. 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐஎல்டி20-யில் புறக்கணிக்கப்படுவதற்கு முன்பு, கடந்த மாதம் பிக் பாஷ் லீக் (பிபிஎல்) சீசன் 15 க்காக சிட்னி தண்டர் அணியுடன் அஸ்வின் ஒப்பந்தம் செய்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிக்பாஷ் லீக்கில் விளையாடும் முதல் இந்தியர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார். அவர் ஜனவரி தொடக்கத்தில் தண்டர் அணியில் இணைவார். கடந்த சீசனில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியிடம் தோற்ற நிலையில், இந்த முறை பிபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேற அணிக்கு உதவுவார். "தண்டர் அணி நிர்வாகத்துடனான எனது உரையாடல்கள் சிறப்பாக இருந்தன, எனது பங்கு குறித்து நாங்கள் முழுமையாக உடன்பட்டுள்ளோம். டேவிட் வார்னர் (சிட்னி தண்டர் கேப்டன்) விளையாடும் விதம் எனக்குப் பிடிக்கும்'' என்று அஸ்வின் தெரிவித்து இருந்தார்.
இந்திய அணியின் மேட்ச் வின்னர் அஸ்வின்
இந்தியாவுக்காக 287 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், டெஸ்ட் வடிவத்தில் 537 விக்கெட்டுகள் உட்பட, சர்வதேச அளவில் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் கிரிக்கெட் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகியவற்றை வென்றுள்ளார். தனிப்பட்ட முறையில், அவர் 2016-ஆம் ஆண்டின் ஐசிசி-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2011-20 தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தார்.
ஐபிஎல்லில் எப்படி?
ஐபிஎல்லில் அஸ்வின் ஐந்து அணிகளுக்காக 221 போட்டிகளில் விளையாடியுள்ளார். சிஎஸ்கேவில் 2010 மற்றும் 2011-ல் இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், போட்டியில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவர் 333 டி20 போட்டிகளில் மொத்தம் 317 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.