நீயா? நானா போட்டியில் ஆஸ்திரேலியா/ஆப்கானிஸ்தான் – 2ஆவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை!

By Rsiva kumar  |  First Published Jun 24, 2024, 1:41 PM IST

சூப்பர் 8 குரூப் 1 சுற்றில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதி வாய்ப்பை பெற்ற நிலையில் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.


அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. குரூப் சுற்று போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், அமெரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.

இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் 2ஆவது அணியாக அரையிறுதி வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

Tap to resize

Latest Videos

சூப்பர் 8 சுற்று போட்டியில், இந்தியா விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை எட்டியிருக்கிறது. எனினும், இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியானது மழையின் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், போட்டி கைவிடப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். ஏற்கனவே 4 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி கூடுதலாக ஒரு புள்ளி வீதம் 5 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும். இதே போன்று 2 புள்ளிகள் பெற்றுள்ள ஆஸ்திரேலியா கூடுதலாக ஒரு புள்ளி வீதம் 3 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் நீடிக்கும்.

இதே போன்று 2 புள்ளிகள் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் 4 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறும். வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும்.

ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும். ஆகையால் இந்தப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால் இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதே போன்று இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும் அதிக நெட் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் ஆண்டிகுவாவில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து 2ஆவது இடம் பிடித்தது. இதன் காரணமாக வரும் 27 ஆம் தேதி கயானாவில் நடைபெறும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. தற்போது அதற்கு பழி தீர்க்க இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா உறுதியான நிலையில் 2ஆவது அணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் கடும் போட்டி போடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!