கொரோனா ஊரடங்கு: போலீஸ் அதிகாரியாக களத்தில் இறங்கி பணியாற்றும் உலக கோப்பை நாயகன்.. ரியல் ஹீரோ என ஐசிசி பாராட்டு

By karthikeyan VFirst Published Mar 29, 2020, 9:07 PM IST
Highlights

கொரோனா எதிரொலியாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஹரியானா தெருக்களில் போலீஸ் அதிகாரியாக களத்தில் இறங்கி பணியாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோஹிந்தர் சர்மாவை ஐசிசி டுவிட்டரில் பாராட்டியுள்ளது.
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜோஹிந்தர் சர்மா 2007 டி20 உலக கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணியில் ஆடினார். அந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவரை அவ்வளவு எளிதாக எந்த கிரிக்கெட் ரசிகரும் மறந்துவிட முடியாது. 

2007 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில், கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மிகவும் நெருக்கடியான சூழலில் அந்த கடைசி ஓவரை வீசிய ஜோஹிந்தர் சர்மா, மிஸ்பா உல் ஹக்கை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். முதல் முறையாக நடத்தப்பட்ட டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. 

ஆனால் அதன்பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் ஜோஹிந்தர் சர்மா சோபிக்கவில்லையென்றாலும், அந்த ஒரு போட்டியில் வரலாற்றில் இடம்பிடித்த ஜோஹிந்தர் சர்மா, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். விளையாட்டு கோட்டாவில் காவல்துறையில் பணி வாய்ப்பை பெற்ற ஜோஹிந்தர் சர்மா ஹரியானாவில் டி.எஸ்.பியாக பணியாற்றிவருகிறார்.

கொரோனாவால் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றிவருகின்றனர்.

அப்படி, இந்த இக்கட்டான சூழலில் கொரோனா பீதிக்கு மத்தியில் மக்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றும் போலீஸாரில் ஜோஹிந்தர் சர்மாவும் ஒருவர். அவர் ஹரியானா தெருக்களில் இறங்கி பணியாற்றிய புகைப்படத்தை கண்ட ஐசிசி, அவரது 2007 உலக கோப்பை டி20 புகைப்படத்தையும் போலீஸாக பணியாற்றும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு, அவரை பாராட்டியுள்ளது. 2007ல் டி20 உலக கோப்பை ஹீரோ என்றும் 2020ல் உலகத்தின் ரியல் ஹீரோ என்றும் ஐசிசி பாராட்டியுள்ளது. 
 

2007: hero 🏆
2020: Real world hero 💪

In his post-cricket career as a policeman, India's Joginder Sharma is among those doing their bit amid a global health crisis.

[📷 Joginder Sharma] pic.twitter.com/2IAAyjX3Se

— ICC (@ICC)
click me!