டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு..? தெளிவுபடுத்திய ஐசிசி

By karthikeyan VFirst Published May 28, 2021, 3:44 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு என்பதை தெளிவுபடுத்தியுள்ளது ஐசிசி.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

முதல் முறையாக ஐசிசியால் நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகள் மிகக்கடுமையாக உள்ளன. அதனால் டெஸ்ட் போட்டிகள் டிரா ஆவது மட்டுமல்லாது, ஒருநாள், டி20 போட்டிகள் கூட டை ஆகின்றன. 2019 உலக கோப்பை ஃபைனல் கூட, டை ஆகி, சூப்பர் ஓவர் வீசப்பட்டு சூப்பர் ஓவரும் டை ஆனது. அதனால் பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் போட்டி முடிவு தீர்மானிக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

எனவே இம்முறை ஐசிசி முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி டிராவில் முடிந்தால், இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இணை வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

 5 நாட்கள் ஆட்டமும் முழுமையாக நடைபெறாமல் வானிலை காரணமாக ஆட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருந்தால், 5 நாள் ஆட்டம் முடிந்த பின், ஆறாவது நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6வது நாள் போட்டி ஆடப்படும். ஆனால், 5 நாட்களில் போட்டியில் முடிவு கிடைக்கவில்லை என்பதற்காக ரிசர்வ் நாள் ஆட்டம் ஆடப்படமாட்டாது.
 

click me!