Vijay Hazare:ஃபைனலில் தமிழ்நாட்டை வீழ்த்தி அபார வெற்றி!முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்த ஹிமாச்சல் அணி

Published : Dec 26, 2021, 06:00 PM IST
Vijay Hazare:ஃபைனலில் தமிழ்நாட்டை வீழ்த்தி அபார வெற்றி!முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்த ஹிமாச்சல் அணி

சுருக்கம்

விஜய் ஹசாரே தொடரின் ஃபைனலில் தமிழ்நாடு அணியை விஜேடி முறைப்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹிமாச்சல் பிரதேச அணி முதல் முறையாக விஜய் ஹசாரே டிராபியை வென்றது.  

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரின் ஃபைனலில் தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சல் பிரதேச அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஹிமாச்சல் பிரதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் பாபா அபரஜித் 2 ரன்னிலும், ஜெகதீசன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய சாய் கிஷோர் 18 ரன்னிலும், 4ம் வரிசையில் இறக்கப்பட்ட முருகன் அஷ்வின் வெறும் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, 40 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த தமிழ்நாடு அணியை தினேஷ் கார்த்திக்கும் பாபா இந்திரஜித்தும் இணைந்து காப்பாற்றினர்.

சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து இந்திரஜித் சிறப்பாக விளையாடினர். இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 202 ரன்களை குவித்தது. முக்கியமான நேரத்தில் பொறுப்பாக பேட்டிங் ஆடி 71 பந்தில் 80 ரன்கள் அடித்தார் பாபா இந்திரஜித்.

சீனியர் வீரர் என்ற பொறுப்புடன் அதிரடியாக ஆடி சதமடித்த தினேஷ் கார்த்திக் 116 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த ஷாருக்கான் 21 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் அடித்தார். விஜய் சங்கர் 16 பந்தில் 22 ரன்கள் அடிக்க, 49.4 ஓவரில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தமிழ்நாடு அணி.

315 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஹிமாச்சல் பிரதேச அணியில் பிரஷாந்த் சோப்ரா (21), திக்விஜய் ராங்கி (0), நிகில் கங்க்டா (18) ஆகிய வீரர்கள் ஒருமுனையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து ஆடினார் தொடக்க வீரர் ஷுபம் அரோரா. 96 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது ஹிமாச்சல் அணி.

4வது விக்கெட்டுக்கு அரோராவும் அமித் குமாரும் இணைந்து 148 ரன்களை குவித்தனர். அரோராவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிய அமித் குமார் அரைசதம் அடித்தார். அமித் குமார் 74 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் நங்கூரமிட்டு ஆடிய அரோரா சதமடித்தார்.

5வது விக்கெட்டுக்கு அரோராவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷி தவானும் சிறப்பாக ஆடினார். ஹிமாச்சல் தொடக்க வீரர் ஷுபம் அரோரா அந்த அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச்சென்றார். ஹிமாச்சல் அணி 47.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஆட்டம் நிறுத்தப்பட்டது. விஜேடி முறைப்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஹிமாச்சல் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஷுபம் அரோரா 136 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் தான் ஹிமாச்சல் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல் முறையாக விஜய் ஹசாரே டிராபியை வென்று சாதனை படைத்தது ஹிமாச்சல் அணி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!