
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய புதிய அணிகள் எல்லாம் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், 5 முறை சாம்பியனான மும்பைஇந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக ஆடிவருகிறது.
இந்த சீசனில் இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் தோல்விகளை தழுவி அதிர்ச்சியளித்தது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை அணி 5 தோல்விகளை அடைந்தநிலையில், லக்னோவிற்கு எதிராக மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லக்னோ அணி நிர்ணயித்த 200 ரன்கள் என்ற இலக்கை அடிக்கமுடியாமல் 181 ரன்கள் அடித்து 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மும்பை அணி.
இந்த சீசனில் இது மும்பை அணிக்கு தொடர்ச்சியாக 6வது தோல்வி ஆகும். இதற்கு முன் ஐபிஎல்லில் 2 அணிகள் மட்டுமே ஒரு சீசனில் தொடர்ச்சியாக 6 தோல்விகள் அடைந்துள்ளன. அந்த 2 அணிகளுடன் இப்போது மும்பை இந்தியன்ஸ் 3வது அணியாக இணைந்துள்ளது.
2013 ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், 2019 ஐபிஎல்லில் ஆர்சிபி அணியும் தொடர்ச்சியாக ஆறு தோல்விகளை தழுவியுள்ளன. அந்த அணிகளுடன் இப்போது மும்பை இந்தியன்ஸும் இணைந்துள்ளது.
டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 2 அணிகளும் ஒருமுறை கோப்பையை வென்றிராத அணிகள். அந்த அணிகள் பொதுவாகவே மோசமான ரெக்கார்டு வைத்துள்ள அணிகள். அதனால் அவை இரண்டும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த பட்டியலில் இணைந்திருப்பது அதிர்ச்சிதான்.