கிண்டல் செய்த பாகிஸ்தான் ரசிகரை அடிக்க முயன்ற ஹரீஷ் ராஃபின் வீடியோ வெளியாகி வைரலான நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் நாளை முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்குகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் என்று 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த தொடரில் இடம் பெற்று விளையாடிய பாகிஸ்தான் 4 போட்டிகளில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. இந்த தொடரில் பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது.
A heated argument between Haris Rauf and a fan in the USA. pic.twitter.com/d2vt8guI1m
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
இதையடுத்து 2ஆவது போட்டியில் இந்தியாவிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 3ஆவது போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்தது. கடைசியாக அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி வாகை சூடியது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர்கள் சொந்த நாட்டிற்கு செல்லாமல் வேறு நாடுகளுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வில் இருந்து வருகின்றனர். குரூப் சுற்று போட்டிகளுடன் பாகிஸ்தான் வெளியேறிய நிலையில் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரீஷ் ராஃப் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் அவரை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொறுமை இழந்த ஹரீஷ் ராஃப் அந்த ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த ரசிகரை தாக்கவும் முயற்சித்துள்ளார். அப்போது அவரது மனைவி மற்றும் மற்ற ரசிகர்கள் அவரை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஹரீஷ் ராஃப் கூறியிருப்பதாவது: இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் எதையும் பகிர வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால், இந்த வீடியோ வெளியான நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ரசிகர்கள், பொது மக்களிடமிருந்து அனைத்து வகையான கருத்துக்களையும் பெறுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கிரிக்கெட் வீரர்களாகிய எங்களை ஆதரிக்கவும் விமர்சிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு. எனினும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் என்று வரும் போது அதற்கேற்ப பதில் அளிப்பதற்கு நான் தயங்கவும் மாட்டேன். ரசிகர்கள் முதலில் கிரிக்கெட் வீரர்களின் குடும்பங்களுக்கு மரியாதை காட்டுவது ரொம்பவே முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.