டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து மகுடம் சூடிய ஹர்திக் பாண்டியா!

By Rsiva kumarFirst Published Jul 3, 2024, 2:52 PM IST
Highlights

டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்திய 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா 2ஆவது முறையாக டிராபி வென்றது. கடந்த 29 ஆம் தேதி பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில், இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா 8 போட்டிகளில் 6 இன்னிங்ஸ் விளையாடி 144 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 11 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் முக்கியமான தருணத்தில் ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லரது விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த நிலையில் தான் டி20 ஆல்ரவுண்டராக தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி நம்பர் 1 இடம் பிடித்து மகுடம் சூடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் காயம் அடைந்த நிலையில் தொடரிலிருந்து வெளியேறினார். பின்னர் ஐபிஎல் தொடர் மூலமாக திரும்ப வந்தார். அதிலேயும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வலம் வந்தார். ஆனால், இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்வியோடு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில் தான் தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா 2ஆவது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடம் பிடித்தார்.

ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஸா ஒரு இடம் முன்னேறி 4ஆவது இடம் பிடித்தார். வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் ஒரு இடம் முன்னேறி 5ஆவது இடமும், இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஒரு இடம் முன்னேறி 8 ஆவது இடம் பிடித்துள்ளனர். இதே போன்று டி20 பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் அக்‌ஷர் படேல் ஒரு இடம் முன்னேறி 7ஆவது இடம் பிடித்துள்ளார். குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்தையும், ஜஸ்ப்ரித் பும்ரா 12 இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

click me!