இதுக்கு மேல அவன் என்னதான்ப்பா பண்ணனும்..? ஏன் அந்த பையன டீம்ல எடுக்காம ஓரங்கட்டுறீங்க..? இளம் வீரருக்காக வரிந்துகட்டிய ஹர்பஜன்

By karthikeyan VFirst Published Sep 30, 2019, 12:58 PM IST
Highlights

உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவரும் இளம் வீரர் ஒருவருக்கு இன்னும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படாதது குறித்த வருத்தத்தை பதிவு செய்துள்ள ஹர்பஜன் சிங், அந்த வீரருக்கு ஊக்கமும் அளித்துள்ளார். 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் மிடில் ஆர்டர் சிக்கலை தீர்க்க பல வீரர்களை பரிசோதித்துவரும் நிலையில், இளம் வீரர் சூர்யகுமார் யாதவை இன்னும் இந்திய அணியில் எடுக்காதது ஏன் என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். 

யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்ட பிறகு இந்திய அணியில் நான்காம் வரிசை பேட்டிங்கிற்கு நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னையால்தான் உலக கோப்பையில் இந்திய அணி தோற்கவே நேரிட்டது. உலக கோப்பைக்கு பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவரும் இதுவரை கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடியுள்ளார். 

இதற்கிடையே, நடந்துவரும் விஜய் ஹசாரே தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் சூர்யகுமார் யாதவ், சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் காட்டடி அடித்தார். 31 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் மும்பை அணி தோற்றது ஒருபுறம் இருந்தாலும், சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங், பார்க்கவே வியப்பாகவும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது. 

இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் அபாரமாக ஆடிவருகிறார். ஆனால் இந்திய அணி இவருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் இன்னும் 4ம் வரிசை வீரரை தேடிக்கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் ஒரு இமேஜை க்ரியேட் செய்துள்ளனர். அந்த இமேஜை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹர்பஜன் சிங், உள்நாட்டு போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்துக்கொண்டே இருக்கும் சூர்யகுமார் யாதவுக்கு ஏன் இன்னும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. தொடர்ந்து இதே மாதிரி கடினமாக உழையுங்கள் சூர்யகுமார்.. உங்களுக்கான நேரம் வரும் என்று அவரை ஊக்கப்படுத்தும் விதமாக ஹர்பஜன் சிங் டுவீட் செய்துள்ளார். 

Don’t know why he doesn’t get picked for india after scoring runs heavily in domestic cricket keep working hard.. your time will come pic.twitter.com/XO6xXtaAxC

— Harbhajan Turbanator (@harbhajan_singh)
click me!