Gambhir slams Rishabh: இதற்கு பெயர் துணிச்சல் இல்ல; முட்டாள்தனம்.. ரிஷப் பண்ட்டை திட்டித்தீர்த்த கௌதம் கம்பீர்

Published : Jan 06, 2022, 04:58 PM IST
Gambhir slams Rishabh: இதற்கு பெயர் துணிச்சல் இல்ல; முட்டாள்தனம்.. ரிஷப் பண்ட்டை திட்டித்தீர்த்த கௌதம் கம்பீர்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் பொறுப்பற்ற முறையில் ஷாட் ஆடி ஆட்டமிழந்த ரிஷப் பண்ட்டை கௌதம் கம்பீர் மிகக்கடுமையாக விளாசியுள்ளார்.  

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்துவருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் மட்டுமே அடிக்க, தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் அடித்தது. 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் தென்னாப்பிரிக்க அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள் தேவை. இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடிவரும் நிலையில், 4ம் நாள் ஆட்டத்தின் முதல் செசன் முழுவதுமாக மழையால்  பாதிக்கப்பட்டது. 2வது செசனும் மைதானம் ஈரமாக இருப்பதால் தாமதமாகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் மட்டுமே அடித்த ரிஷப் பண்ட், 2வது இன்னிங்ஸில் மோசமான ஷாட்டை ஆடமுயன்று ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். கடந்த 2 ஆண்டுகளாக சரியாக ஆடாத புஜாராவும் ரஹானேவும் அணியில் தங்களது இடத்தை தக்கவைக்க சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருவருமே அரைசதம் அடித்தனர். சீனியர் வீரர்கள் என்பதால் அவர்களுக்கு இவ்வளவு அழுத்தம். இளம் வீரரான ரிஷப் பண்ட்டும் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார் என்றாலும், அவரது மோசமான ஷாட் செலக்‌ஷன் தான் அவர் சீக்கிரம் அவுட்டாவதற்கு காரணம்.

ரிஷப் பண்ட் அவரது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடித்தான் இக்கட்டான நேரங்களில் இந்திய அணியை காப்பாற்றியிருக்கிறார். ஆனால் அதையே காரணம் காட்டி, சூழலை கருத்தில்கொள்ளாமல் அவர் ஆடும் மோசமான பேட்டிங்கிற்கு முட்டுக்கொடுக்க முடியாது. 

அந்தவகையில், 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அவர் அலட்சியமாக ஷாட் ஆடி ஆட்டமிழந்ததை முட்டாள்தனம் என விமர்சித்திருக்கிறார் கம்பீர். 2வது இன்னிங்ஸில் ரிஷப் பேட்டிங் ஆட வந்ததும், அவரை ஸ்லெட்ஜ் செய்தார் தென்னாப்பிரிக்க வீரர் வாண்டெர் டசன். டசன் சீண்டியதற்கு அடுத்த பந்தை இறங்கிவந்து ஷாட் ஆடமுயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார் ரிஷப் பண்ட். ஸ்லெட்ஜிங் செய்த அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்து தென்னாப்பிரிக்க அணியின் முயற்சிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ரிஷப் பண்ட்.

ரிஷப் ஆடிய ஷாட்டால் அதிருப்தியடைந்த கம்பீர், ரிஷப்பை மிகக்கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரிஷப் மோசமான ஷாட்டை ஆடி அவுட்டாகும்போதெல்லாம், அதுதான் அவரது இயல்பான பேட்டிங்; அப்படி ஆடித்தான் அவர் வெற்றிகரமாக திகழ்ந்திருக்கிறார் என்று கூறி சிலர் முட்டுக்கொடுக்கின்றனர். ஆனால் ஆட்டத்தின் சூழலை கருத்தில்கொள்ளாமல் அவர் இஷ்டத்துக்கு மட்டமாக பேட்டிங் ஆடுவதை கம்பீர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கம்பீர், எனக்கு ஸ்லெட்ஜிங் ரொம்ப பிடிக்கும். மனிதர்கள் தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்; ரோபோக்கள் அல்ல. எனவே உணர்ச்சிகளுக்கு முக்கிய ரோல் உண்டு. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது, அனைத்து சவால்களையும் அழுத்தங்களையும் வீரர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான். 

ரிஷப் பண்ட் ஆடி அவுட்டான ஷாட்டை, ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடியிருந்தால் இவ்வளவு விமர்சனங்கள் எழுந்திருக்காது. யாரும் அவரை விமர்சிக்கவும் மாட்டார்கள். ஆனால் ஆட்டம் இருந்த சூழலில், அவர் ஆடிய ஷாட் மோசமானது. ஆட்டத்தின் சூழலை பொறுத்துத்தான் பேட்டிங் ஆட வேண்டும். துணிச்சலுக்கும் முட்டாள்தனத்துக்கும் இடையே மெல்லிய கோடு தான் உள்ளது. ரிஷப்பின் பேட்டிங் துணிச்சலானது அல்ல; முட்டாள்தனமானது என்று கம்பீர் விமர்சித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: இன்று ஒரு மினி உலகக்கோப்பை பைனல்! Super 8ல் தென்னாப்பிரிக்காவை கதறவிடுமா இந்தியா? ரெக்கார்டுகள் சொல்லும் அதிரடி உண்மை!
இந்தியாவுக்கு பெரிய ஷாக்..! ஹர்திக் அடித்த பந்து.. நிலைகுலைந்த சிராஜ்: களமிறங்குவதில் சிக்கல்..