தோனி வெற்றிகரமான கேப்டனாக திகழ ஜாகீர் கான் தான் காரணம்..! நேர்மையான வீரர் சொன்ன சுவாரஸ்யமான தகவல்

By karthikeyan VFirst Published Jul 11, 2020, 7:26 PM IST
Highlights

தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்ததற்கு ஜாகீர் கான் தான் காரணம் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 
 

தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்ததற்கு ஜாகீர் கான் தான் காரணம் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் தோனியும் ஒருவர். 2007ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி, வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். 2008ம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று 2014ம் ஆண்டு வரை இருந்தார். 2014ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 

கங்குலியின் கேப்டன்சியில் வெற்றி நடை போட ஆரம்பித்த இந்திய அணி, தோனியின் கேப்டன்சியில் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தது. இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தார் தோனி.

தோனி வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்ததற்கு, அவருக்கு கிடைத்த அணி முக்கியமான காரணம். சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் என கங்குலியால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட திறமையான வீரர்கள் பலர் தோனிக்கு பக்கபலமாக இருந்தனர். 

சிறந்த அணியை பெற்றிருந்ததால்தான் தோனியால் இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடிந்தது. அதனால் கிடைத்ததுதான், சிறந்த கேப்டன் என்ற பெருமையும் புகழும். தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடவில்லை. ஆனால் அவர் கேப்டனாக இருந்த 6 ஆண்டு காலத்தில் கணிசமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். 

தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக ஜொலித்தார் என்றால், அதற்கு ஜாகீர் கான் தான் காரணம் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் கம்பீர், தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்ததற்கு ஜாகீர் கான் தான் காரணம். ஜாகீர் கானை அணியில் பெற்றது தோனியின் அதிர்ஷ்டம். ஜாகீர் கானை அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் அந்த கிரெடிட் கங்குலியையே சேரும். ஜாகீர் கான் இந்தியாவின் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர் என்று கம்பீர் புகழாரம் சூட்டினார். 

தோனியின் தலைமையில் ஜாகீர் கான் 33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2011ல் தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியிலும் ஜாகீர் கான் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!