டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் அபார சாதனை..! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Jul 11, 2020, 5:17 PM IST
Highlights

பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்துள்ளார். 
 

பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான சாதனையை படைத்துள்ளார். 

இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 விதமான போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக ஜொலிப்பவர் பென் ஸ்டோக்ஸ். 

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்காக சிறப்பான பங்களிப்பை செய்யக்கூடியவர். 2019 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றதில் முக்கியமான பங்கு ஸ்டோக்ஸைத்தான் சேரும். இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி வரை போராடி இங்கிலாந்து அணியை தோல்வியிலிருந்து மீட்டு உலக கோப்பையை வென்று கொடுத்தார். அதேபோல, கடந்த ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரிலும் ஒரு போட்டியில், கடைசி விக்கெட்டுக்கு, சுமார் 80 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பேட்ஸ்மேனை ஒருமுனையில் நிறுத்திவிட்டு, மறுமுனையில் அனைத்து ரன்களையும் தனிஒருவனாக அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தவர் பென் ஸ்டோக்ஸ். 

அந்தளவிற்கு முழு அர்ப்பணிப்புடன், கடைசி வரை போராடக்கூடிய சிறந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தான் கேப்டனாக செயல்படுகிறார். 

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 204 ரன்களையும் வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன்களையும் அடித்தன. 114 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்துக்கொண்டது. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர். விக்கெட் இழப்பின்றி 60 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது இங்கிலாந்து அணி. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக 43 ரன்களை அடித்த பென் ஸ்டோக்ஸ், 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் பென் ஸ்டோக்ஸ். 

டெஸ்ட் கிரிக்கெட்டில், 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் ஆகிய இரண்டு மைல்கல்லையும் அதிவேகமாக எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ், 63 டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். பென் ஸ்டோக்ஸ் 64 போட்டிகளில் எட்டியுள்ளார். ஜாக் காலிஸ், கபில் தேவ், இயன் போத்தம், டேனியல் வெட்டோரி ஆகிய வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய ஆல்ரவுண்டர்கள் ஆவர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 
 

click me!