விராட் கோலி ஒரு கேப்டனா எதையுமே சாதிக்கல! கோலியின் துதிபாடுறவங்களுக்கு மத்தியில் பகிரங்மா பேசிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Jun 15, 2020, 10:04 PM IST
Highlights

விராட் கோலி ஒரு கேப்டனாக இன்னும் எதையும் சாதிக்கவில்லை என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
 

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக 2014ம் ஆண்டு பொறுப்பேற்ற விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக 2017ம் ஆண்டு பொறுப்பேற்றார். விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றிகளை குவித்துவருகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிகமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து, பெரும்பாலான ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. 

ஆனால் ஐசிசி தொடர் எதையும் வென்றதில்லை. 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில், அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 2013ல் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்னர், இதுவரை ஒரு ஐசிசி தொடரைக்கூட இந்திய அணி வெல்லவில்லை. 

இருதரப்பு, முத்தரப்பு தொடர்களை வெல்வதால் மட்டுமே கோலி சிறந்த கேப்டன் கிடையாது என்று ஏற்கனவே கம்பீர் தெரிவித்திருந்த நிலையில், இப்போது, கோலி ஒரு கேப்டனாக எதையுமே சாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஐசிசி தொடர் எதுவும் வென்றதில்லை என்பதுதான். ஐபிஎல்லில் கோலியால் ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்கமுடியாததால், அவரது கேப்டன்சியை ஏற்கனவே பலமுறை கோலி விமர்சித்துள்ளார். 

இந்நிலையில், இர்ஃபான் பதானுடனான உரையாடலில், கோலி ஒரு கேப்டனாக பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் இதுவரை அவர் கேப்டனாக எதுவும் சாதிக்கவில்லை என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 

கோலியின் கேப்டன்சி குறித்து பேசிய கம்பீர், ஒரு அணியாக இணைந்து ஆடும் விளையாட்டு கிரிக்கெட். இதில் தனிப்பட்ட முறையில் ரன் குவிப்பது மட்டுமே சாதனையாகாது. பிரயன் லாரா, ஜாக் காலிஸ் என ரன்களை மட்டுமே குவித்த பல வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் ஐசிசி தொடர்களை வெல்லவில்லை; பெரியளவில் சாதிக்கவில்லை. விராட் கோலியும் அப்படித்தான். இதுவரை ஒரு கேப்டனாக அவர் எதையும் சாதிக்கவில்லை. அவர் சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது. வெறுமனே ரன்களை குவிப்பது மட்டுமே சாதனையல்ல. என்னை பொறுத்தமட்டில் ஐசிசி தொடர்களை வெல்வது மட்டுமே, ஒரு வீரரின் கெரியரை முழுமைப்படுத்தும் என்று கம்பீர் தெரிவித்தார். 

பாராட்டுகளை விட, ஒருவரிடமுள்ள குறையை எடுத்து சொல்வதோ அல்லது அவர் மீதான விமர்சனங்களோ தான், ஒருவரது முன்னேற்றத்துக்கும் உதவுவதுடன், மேலும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுக்கும். அந்தவகையில், முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் எப்போதுமே கோலியை புகழ்ந்து மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கம்பீர் ஒருவர் மட்டுமே விராட் கோலியை சாதனையை நோக்கி தூண்டிவிடும் வகையில், உண்மைகளை உரக்க சொல்லிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!