அடுத்த சீசன்ல பாருங்க ஆர்சிபியோட ஆட்டத்த.. அதிரடி மாற்றத்துக்கு தயாரான ஆர்சிபி.. கேரி கிறிஸ்டனின் பக்கா திட்டம்

By karthikeyan VFirst Published May 4, 2019, 1:52 PM IST
Highlights

ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ் என்ற உலகின் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் இருந்தும் கூட அந்த அணியால் ஐபிஎல்லில் ஜொலிக்க முடியவில்லை. 

ஐபிஎல்லில் 11 சீசன்கள் முடிந்து 12வது சீசன் நடந்துவருகிறது. ஐபிஎல்லில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. அதேநேரத்தில் ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

இந்த மூன்று அணிகளும் இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் கண்டன. இவற்றில் டெல்லி அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது. மற்ற இரண்டு அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதி பெறவில்லை. 

இந்த சீசனும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு கடும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் ஆர்சிபி அணி தொடர் தோல்வியை தழுவியது. அதன்பின்னர் சில வெற்றிகளை பெற்றாலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற முடியவில்லை. 

ஆர்சிபி அணியில் கோலி, டிவில்லியர்ஸ் என்ற உலகின் தலைசிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் இருந்தும் கூட அந்த அணியால் ஐபிஎல்லில் ஜொலிக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம், அணியின் கோர் வீரர்கள் சரியாக இல்லாததுதான். கோர் வீரர்கள் என்று கோலி - டிவில்லியர்ஸை தவிர யாருமே இல்லை. சாஹல் மட்டும் சில சீசன்களாக ஆடிவருகிறார். 

ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளை பார்த்தால் அணியின் கோர் வீரர்கள் வலுவாக இருப்பார்கள். சிஎஸ்கேவில் தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, பொல்லார்டு, மலிங்கா, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பும்ரா ஆகியோரும் நிரந்தர வீரர்களாக உள்ளனர். கேகேஆர் அணியில் சுனில் நரைன், உத்தப்பா, ஆண்ட்ரே ரசல், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். சன்ரைசர்ஸ் அணியை எடுத்துக்கொண்டால் வார்னர், வில்லியம்சன், புவனேஷ்வர் குமார், ரஷீத் கான் ஆகியோர் உள்ளனர். 

எனவே அவர்களுக்கு எல்லாம் நம்ம டீம் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. அதுவே அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முக்கியமான காரணமாகவும் திகழ்கிறது. அதுமாதிரியான நிரந்தர வீரர்கள் ஆர்சிபி அணியில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு கொண்டே இருக்கிறது. 

எனவே கோர் டீமை உருவாக்குவதுதான் முக்கியம். அப்போதுதான் வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படும் என்பதை உணர்ந்த ஆர்சிபி தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், கோர் டீமை உருவாக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் ஆர்சிபி அணி சொதப்புவதற்கு இதுதான் முக்கியமான காரணம் என்பதை கண்டறிந்த கிறிஸ்டன், அதை சரிசெய்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கேரி கிறிஸ்டன், அடிக்கடி மாற்றங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான். கோர் டீமை உருவாக்க வேண்டும். ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளில் எல்லாம் கோர் டீம் வலுவாக உள்ளது. ஆர்சிபி அணியில் அடிக்கடி வீரர்களை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் முக்கியமான பிரச்னை. எனவே அணி கட்டமைப்பில் அடுத்த ஆண்டு மாற்றங்கள் செய்யப்படும். வீரர்களை மாற்றிகொண்டே இருக்கக்கூடாது. ஏனெனில் ஐபிஎல் என்பது தனிநபர் மட்டுமே நன்றாக ஆடினால் ஜெயிக்கக்கூடியது அல்ல. அனைத்து வீரர்களுமே நன்றாக ஆட வேண்டும். அவர்களுக்கு ஆதரவு இருக்கும்போதுதான் அவர்களால் சிறப்பாக ஆடமுடியும் என்று கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். 

click me!