நினைத்ததை நடத்தியே தீருவேன்.. ஒற்றை காலில் நிற்கும் தாதா.. வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் ஈடன் கார்டன்

By karthikeyan VFirst Published Oct 29, 2019, 2:21 PM IST
Highlights

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறார். 
 

பகலிரவு டெஸ்ட் ஆட்டத்திற்கு ஆதரவாளரான கங்குலி, டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி ரசிகர்களை ஈர்க்க, பகலிரவு ஆட்டங்கள் வழிவகுக்கும் என நம்புகிறார். ஏனெனில் ரசிகர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலங்கள் ஆகியவற்றிற்கு விடுப்பு எடுத்து டெஸ்ட் போட்டியை காண வர இயலாது. எனவே பகலிரவு ஆட்டங்களாக நடத்தினால், ரசிகர்கள் வருவார்கள் என்பது கங்குலியின் நம்பிக்கை. 

அதை கங்குலியே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டார் கங்குலி. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. 

அந்த போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதை வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளது. ஆனால் அந்த போட்டியை பகலிரவு போட்டியாக ஆடிவது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்னும் முடிவெடுக்கவில்லை. 

இந்நிலையில், தனது சொந்த மண்ணான கொல்கத்தா ஈடன் கார்டனில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடத்தப்படும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கொல்கத்தா டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்துவது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசனுடன் பேசினேன். அவரும் ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால் வீரர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக கூறினார். கொல்கத்தா டெஸ்ட் கண்டிப்பாக பகலிரவு போட்டியாக நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்களது முடிவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

கொல்கத்தா டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடந்தால், இந்தியாவில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திய பெருமையை பெறுவதோடு வரலாற்றிலும் ஈடன் கார்டன் மைதானம் இடம்பெறும். 
 

click me!