பாகிஸ்தான் பவுலர்களை கொம்புசீவிவிடும் அக்தர்.. ஆஸ்திரேலிய பவுலர்கள் கை என்ன பூப்பறிச்சுகிட்டா இருக்கும்..?

By karthikeyan VFirst Published Oct 29, 2019, 12:13 PM IST
Highlights

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 
 

பாகிஸ்தான் அணிக்கு இது மிக முக்கியமான தொடர். சர்ஃபராஸ் அகமது கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, புதிய கேப்டன்களின் தலைமையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் ஆடவுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே டெஸ்ட் போட்டியில் வென்று புள்ளிகளை பெறும் முனைப்பில் உள்ளன. 

ஆனால் ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்துவது என்பது பாகிஸ்தானால் முடியாத காரியம். ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்ற ஒரே துணைக்கண்ட அணி இந்தியா தான். பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் இன்னும் ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்தி தொடரை வென்றதில்லை. 

அதிலும் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் தற்போதைய சூழலில் படுமோசமான நிலையில் உள்ளது. வாசிம் அக்ரம், இன்சமாம் உல் ஹக், வக்கார் யூனிஸ், யூனிஸ் கான், முகமது யூசுஃப், ஷோயப் அக்தர் ஆகிய தலைசிறந்த வீரர்கள் இருந்தபோதே அந்த அணியால், ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியவில்லை. தொடரை வெல்வது இருக்கட்டும்.. 1995ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட பாகிஸ்தான் அணி வென்றதேயில்லை. 

எனவே பாகிஸ்தான் அணிக்கு இந்த சுற்றுப்பயணம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் அணியில் இளம் பவுலர்கள் நசீம் ஷா, முசா கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களுக்கும் கேப்டனுக்கும் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் அக்தர் ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அக்தர், நான் சொல்வது ரொம்ப முக்கியமானது. பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட வேண்டும். 2 பந்தை பேட்ஸ்மேனின் தலை அல்லது கழுத்திற்கு வீச வேண்டும். கேப்டன்சியும் அதிரடியாக இருக்க வேண்டும். டிஃபென்சிவ் கேப்டன்சி செய்யக்கூடாது. மிரட்டலாக அட்டாக் செய்யும் வகையில் பந்துவீசுமாறு பவுலர்களுக்கு அறிவுறுத்தி அட்டாக்கிங் கேப்டன்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

பாகிஸ்தான் பவுலர்கள், பேட்ஸ்மேன்களின் தலைக்கோ கழுத்திற்கோ குறிவைத்து வீசினால், ஆஸ்திரேலிய பவுலர்கள் சும்மா இருப்பார்களா..? அவர்களிடம் நம்பர் 1 பவுலரான கம்மின்ஸ் உள்ளார். அவரைத்தவிர ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகிய மிரட்டலான பவுலர்கள் உள்ளனர். எனவே இந்த தொடர் கடுமையான போட்டியாக அமையும். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 
 

click me!