ஐபிஎல் நடக்கலைனா எத்தனை ஆயிரம் கோடி இழப்பு தெரியுமா..? அடேங்கப்பா.. கங்குலி ஓபனா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

By karthikeyan VFirst Published May 15, 2020, 2:29 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் நடக்கவில்லையென்றால், பிசிசிஐக்கு ரூ.4000 கோடி இழப்பு ஏற்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.
 

கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு அமல்படுத்தும் முன்பே, ஐபிஎல் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே மார்ச் 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

உலகிலேயே அதிகமான பணம் புழங்கக்கூடிய டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். ஐபிஎல்லில் இரண்டே மாதத்தில் கோடிகளில் சம்பாதிக்கலாம் என்பதால், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஐபிஎல்லில் ஆட ஆர்வம் காட்டுகின்றனர். ஐபிஎல் நடக்கும் இரண்டரை மாதம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டம் போலத்தான். 

இந்த முறை கொரோனாவால் ஐபிஎல் எப்போது நடக்கும் என்பதே தெரியவில்லை. இந்நிலையில், ஐபிஎல் 13வது சீசன் நடக்காவிட்டால் பிசிசிஐக்கு ரூ.4000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள கங்குலி, பிசிசிஐ-யின் பொருளாதார நிலை குறித்து ஆராய வேண்டியுள்ளது. எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஐபிஎல் நடக்காவிட்டால் பிசிசிஐ-க்கு ரூ.4000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இது மிகப்பெரிய இழப்பு. ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால், அதன் மீது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரியளவில் ஈர்ப்பு இருக்காது. தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டும் ஸ்டேடியத்தில் அனுமதித்தால் அவர்கள், ஸ்டேடியத்திலிருந்து வெளியேறும்போதும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அது ரொம்ப கஷ்டமான விஷயம் என்று கங்குலி தெரிவித்தார்.

ஐபிஎல் நடத்தப்படவில்லையென்றால், ரசிகர்கள் கட்டணம், ஒளிபரப்பு உரிமத்தொகை ஆகிய வருவாய் இழப்பு ஏற்படும். அதைத்தான் கங்குலி, ரூ.4000 கோடி அளவிற்கு மொத்த இழப்பு இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். 

click me!