இந்தியாவுக்காக 8 வருஷம் ஓபனிங்ல இறங்கி ஆடியிருக்கேன்.. என்கிட்டயேவா..? ரோஹித், வார்னருக்கு தவான் பதிலடி

By karthikeyan VFirst Published May 14, 2020, 2:48 PM IST
Highlights

இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொள்ள தவான் விரும்பமாட்டார் என்ற ரோஹித் சர்மா மற்றும் வார்னரின் கருத்து குறித்து மனம் திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான். 
 

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், 2010ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடிவருகிறார். 7 ஆண்டுகளுக்கும் மேலாக ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னருடன் தொடக்க வீரராக சில ஆண்டுகள் ஆடியிருக்கிறார். 

இந்நிலையில், ரோஹித் சர்மாவும் வார்னரும் இன்ஸ்டாகிராம் லைவில் பேசும்போது, தங்களது ஓபனிங் பார்ட்னர் தவான் குறித்தும் பேசினர். அப்போது தவான் குறித்து பேசிய வார்னர், தவான் பெரும்பாலும் முதல் பந்தை எதிர்கொள்ள விரும்பமாட்டார். ஆனால் ஒரேயொரு முறை மட்டும், முதல் பந்தை எதிர்கொண்டார். எதிரணியில் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் முதல் ஓவரை வீசியபோது, அவரே வந்து நான் முதல் பந்தை ஆடுகிறேன் என்று சொல்லி ஆடினார். மற்றபடி, ஃபாஸ்ட் பவுலர்கள் வீசும்போது முதல் பந்தை எதிர்கொள்ளமாட்டார். குறிப்பாக இடது கை ஃபாஸ்ட் பவுலர்கள் உள்நோக்கி(ஸ்டம்ப்பை நோக்கி) வீசும் பந்துகளை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை என்று தவான் சொல்லிவிடுவார் என வார்னர் கூறினார். 

உடனே வார்னரின் கருத்துக்கு பதிலளித்த ரோஹித், அவன்(தவான்) ஒரு இடியட். தவான் முதல் பந்தை எதிர்கொள்ள மாட்டார். ஸ்பின்னர்களை எதிர்கொள்ள விரும்பும் தவான், ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்ள அந்தளவிற்கு விரும்புவதில்லை என்றார் ரோஹித். 

இந்நிலையில், அவர்களின் கருத்துக்கு இர்ஃபான் பதானுடனான லைவ் சேட்டில் பதிலளித்துள்ளார் தவான். ரோஹித் மற்றும் வார்னரின் கருத்து குறித்து பேசிய தவான், நான் முதல் பந்தை ஆட விரும்பமாட்டேன் என்பது உண்மைதான். ஆனால் ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்ள விரும்பாமல் தான் முதல் பந்தை ஆடவில்லை என்ற கருத்துடன் நான் உடன்படமாட்டேன். அனைவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். நான் ஒரு ஓபனிங் பேட்ஸ்மேன். இந்திய அணிக்காக 8 ஆண்டுகளாக தொடக்க வீரராக ஆடிவருகிறேன். ஃபாஸ்ட் பவுலர்களை ஆடாமல் எப்படி ஆடியிருப்பேன். முதல் ஓவரை எதிர்கொள்ளவில்லை என்றாலும், இரண்டாவது ஓவரை ஆடியிருப்பேன் அல்லவா? அதனால் ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்ள விரும்பாமல், முதல் பந்தை ஆடாமல் இல்லை.

முதல் பந்தை ஆட விரும்பமாட்டேன் என்பதை நேர்மையுடன் ஒப்புக்கொள்கிறேன். பிரித்வி ஷா மாதிரியான இளம் பேட்ஸ்மேன்கள் என்னுடன் தொடக்க வீரராக இறங்கும்பட்சத்தில், கண்டிப்பாக நான் தான் முதல் பந்தை எதிர்கொள்வேன். சாம்பியன்ஸ் டிராபியில் ஆரம்பித்தது இது.. ஆம்.. சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித்தை முதல் பந்தை ஆட சொன்னேன். அதிலிருந்து அப்படியே தொடர்கிறது என்றார் தவான். 

click me!