கேப்டன் கோலி, கோச் சாஸ்திரி.. 2 பேரையும் தாறுமாறா கிழித்து தொங்கவிட்ட காம்பீர்

By karthikeyan VFirst Published Mar 19, 2019, 10:03 AM IST
Highlights

இந்திய அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் சாஸ்திரி மற்றும் அணி நிர்வாகத்தினரை முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

ஓரளவிற்கு அணி உறுதி செய்யப்பட்டுவிட்டாலும், பேட்டிங் ஆர்டரில் முக்கியமான 4ம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 4ம் வரிசைக்கு ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தோனி உட்பட ஏராளமான வீரர்களை களமிறக்கி பரிசோதித்த இந்திய அணி, ஒருவழியாக ராயுடுவை உறுதி செய்தது. 

ராயுடுவும் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய தொடர்களில் நன்றாக ஆடினார். இதையடுத்து ராயுடுதான் உலக கோப்பையில் நான்காம் வரிசையில் இறங்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அண்மையில் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராயுடு சோபிக்கத்தவறினார். முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 

3 போட்டிகளில் சொதப்பியதால், கடைசி 2 போட்டிகளில் ராயுடு அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடுவின் நீக்கம், 4ம் வரிசைக்கு வேறு வீரரை இந்திய அணி தேடுகிறது என்ற தகவலை உணர்த்துவதாக அமைந்தது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் 4ம் வரிசை வீரர் உறுதி செய்யப்படாதது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பல முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தங்களது பரிந்துரைகளை தெரிவித்துவருகின்றனர். கங்குலி, பாண்டிங், கும்ப்ளே என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் 4ம் வரிசை வீரரை உறுதி செய்ய ஐபிஎல்லை கடைசி வாய்ப்பாக கருதுகிறது.

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், 4ம் வரிசை வீரரை இன்னும் உறுதி செய்யாததை காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். கேப்டன் கோலி வீரர்கள் விஷயத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியிருந்த காம்பீர், அதே குற்றச்சாட்டை மீண்டும் அழுத்தம் திருத்தமாக முன்வைத்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள காம்பீர், பேட்டிங் ஆர்டர் இறுதி செய்யப்பட்டு வலுவான மற்றும் உறுதியான பேட்டிங் ஆர்டருடன் உலக கோப்பைக்கு செல்ல வேண்டுமானால், முதலில் 4ம் வரிசை வீரரை கூடிய விரைவில் உறுதி செய்து அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தோனி கடந்த ஆண்டு முழுவதும் சரியாக ஆடாதபோதும் அவருக்கு கேப்டன் கோலியும் அணி நிர்வாகமும் ஆதரவாக இருந்தது. ஷிகர் தவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சரியாக ஆடவில்லை. ஆனால் அவரும் ஃபார்முக்கு திரும்பும்வரை பொறுமை காத்தனர். ஆனால் ராயுடு விஷயத்தில் அப்படி செய்யவில்லை. ஒருநாள் போட்டிகளில் சுமார் 50 ரன்கள் ஆவரேஜ் வைத்திருக்கும் ராயுடுவை வெறும் 3 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக தூக்கிவிட்டனர். எல்லா வீரர்களுக்கும் இது நிகழ்வதுதான். அதற்காக உடனடியாக அணியிலிருந்து நீக்குவது சரியல்ல. ராயுடு காட்டப்பட்ட கடுமை, வேறு எந்த வீரர் மீதும் காட்டப்பட்டதாக தெரியவில்லை என்று காம்பீர் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணி நிர்வாகத்தினரை கடுமையாக சாடியுள்ளார். 
 

click me!