உன்னை இப்பவும் டீம்ல எடுக்கலைனா பெட்டி படுக்கையலாம் கட்டிகிட்டு கிளம்பிருப்பா நீ.. உன் கெரியர் ஓவர்!! காம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 12, 2019, 10:51 AM IST
Highlights

ஐசிசி தொடர்கள் என்றாலே அடித்து நொறுக்குபவர் தவான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் தவானுக்கு கை கட்டைவிரலில் அடிபட்டது. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய அணி, முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 

இந்திய அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதேபோலவே டாப் ஆர்டரும் பவுலர்களும் முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரில் ஒருவர் கடைசி வரை நின்றாலோ அல்லது சதமடித்தாலோ இந்திய அணியின் வெற்றி நிச்சயமாகிவிடும். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து, கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்து அசத்தினார். இவ்வாறு இந்திய அணிக்கு எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐசிசி தொடர்கள் என்றாலே அடித்து நொறுக்குபவர் தவான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் தவானுக்கு கை கட்டைவிரலில் அடிபட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தவான், அபாரமாக ஆடி சதமடித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யவில்லை. தவானின் கையை பரிசோதித்ததில் கட்டை விரலில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

எனவே அவர் அடுத்த சில போட்டிகளில் ஆடமாட்டார். நாளை நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மற்றும் 16ம் தேதி நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் தவான் கண்டிப்பாக ஆடமாட்டார். அதன்பின்னர் நடக்கும் ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் ஆடமாட்டார் என்றே தெரிகிறது. இந்த மாதத்தில் நடக்கும் போட்டிகளில் ஆட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஜூலை 2ம் தேதி நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டி, அதன்பின்னர் இலங்கைக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தவான் ஆடாததால் தொடக்க வீரராக ரோஹித்துடன் ராகுல் களமிறக்கப்படுவார். தவானுக்கு பதிலாக யார் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. உலக கோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் ராயுடு ஆகிய இருவரின் பெயர்களும் அடிபடுகின்றன. 

ரிஷப் பண்ட்டாவது இளம் வீரர். இந்த உலக கோப்பை இல்லையென்றாலும் அடுத்த உலக கோப்பையில் ஆடலாம். ஆனால் ராயுடுவுக்கு இதுதான் கடைசி சான்ஸ். 33 வயதாகும் ராயுடு, கடும் போராட்டத்துக்கு பிறகு, கடந்த ஆண்டுதான் அணியில் எடுக்கப்பட்டார். நான்காம் வரிசையில் ஓரளவிற்கு ஆடிய நிலையில், அவர்தான் உலக கோப்பையில் நான்காம் வரிசை வீரர் என்று கிட்டத்தட்ட உறுதியான நிலையில், கடைசி நேரத்தில் அவரது இடத்தை பிடித்தார் விஜய் சங்கர். 

அதனால் ராயுடு கடும் அதிருப்தியடைந்தார். ராயுடுவுக்கு ஆதரவாக பல முன்னாள் வீரர்களும் வருத்தம் தெரிவித்தனர். ராயுடுவுக்கு ஆதரவாக இருப்பவர்களில் முக்கியமானவர் காம்பீர். இந்நிலையில், தற்போது காயமடைந்த தவானுக்கு பதில் அணியில் யார் சேர்க்கப்படுவார் என்ற கேள்வி இருக்கும் நிலையில், ராயுடுவை எடுக்க வேண்டும் என்று காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய காம்பீர், ஒருநாள் போட்டிகளில் 45 சராசரி வைத்திருக்கும் ராயுடு, உலக கோப்பை அணியில் இடம்பெறாதது பெரிய ஏமாற்றம் தான். காயமடைந்திருக்கும் தவானுக்கு பதிலாக ராயுடு இப்போதும் அணியில் எடுக்கப்படவில்லை என்றால், கிட்டத்தட்ட அவரது கெரியர் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தவானுக்கு பதில் எடுக்கப்படவில்லை என்றால் ராயுடு பெட்டி படுக்கையை கட்டிக்கொள்ளலாம். சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிந்துவிடும். அதனால் ராயுடு ஐபிஎல்லில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று காம்பீர் தெரிவித்துள்ளார். 
 

click me!