ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மாற்றம்..? குட்டையை குழப்பிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Sep 13, 2019, 12:20 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்றவர் ஸ்மித் தான். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்கிறார். 
 

ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் மீண்டும் கேப்டன் ஆவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடையும், பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. அதனால் ஸ்மித்தின் கேப்டன் பதவியும் வார்னரின் துணை கேப்டன் பதவியும் பறிபோனது. ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச்சும் டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்னும் நியமிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள்தான் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி சென்றுகொண்டிருக்கின்றனர். 

தடை முடிந்து திரும்பிய ஸ்மித்தும் வார்னரும் உலக கோப்பையில் ஆடினர். உலக கோப்பையில் வார்னர் அசத்த, ஆஷஸ் தொடரில் ஸ்மித் மிரட்டிவருகிறார். முதல் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதங்கள், இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92, நான்காவது போட்டியில் ஒரு இரட்டை சதம் மற்றும் 82 ரன்கள் என மொத்தமாக வெரும் 5 இன்னிங்ஸ்களில் 671 ரன்களை குவித்துள்ளார் ஸ்மித். 

ஆஷஸ் தொடரின் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்றவர் ஸ்மித் தான். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக ஸ்மித் தான் திகழ்கிறார். 

ஸ்மித்தின் ஆதிக்கம் அவர் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்க வழிவகை செய்வதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. டிம் பெய்ன் கேப்டனானதே ஒரு விபத்து எனவும் அவரை ஆக்சிடெண்டல் கேப்டன் எனவும் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது ஸ்லெட்ஜ் செய்வதற்காக கூறியிருந்தார். அதையே பலரும் வழிமொழிகின்றனர். 

ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரமாக ஆடிவரும் நிலையில், ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆவார் என முன்னாள் வீரர் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள மார்க் டெய்லர், ஸ்மித், வார்னர், பான்கிராஃப்ட் ஆகிய மூவருக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை வழங்கியபோது, நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் தான் இருந்தேன். ஸ்மித் அனுபவித்த மோசமான அனுபவத்தின் விளைவாக, அவர் மீண்டும் கேப்டனானால், முன்பைவிட பன்மடங்கு வலிமையான கேப்டனாக திகழ்வார். ஸ்மித் உடனே கேப்டன் ஆகமுடியாது. ஆனால் டிம் பெய்ன் கேப்டன் பொறுப்பின் கடைசி காலத்தில் இருக்கிறார். எனவே கண்டிப்பாக புதிய கேப்டன் பொறுப்பேற்றாக வேண்டும். அப்படி பார்க்கையில், அணியை வழிநடத்த ஸ்மித் தான் சரியான வீரர் என்று மார்க் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!