
ஐபிஎல் 15வது சீசனில் மிகப்பெரிய வீரர்களை நோக்கி மற்ற அணிகளை போல ஓடாமல் இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அணியை கட்டமைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான்.
ஏலத்திற்கு முன்பாக கேப்டன் கேன் வில்லியம்சனுடன், இளம் வீரர்களான அப்துல் சமாத் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரை மட்டுமே தக்கவைத்த சன்ரைசர்ஸ் அணி, ஏலத்திலும் அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஷஷான்க் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இளம் வீரர்களையும், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன் ஆகிய பழைய அணி வீரர்களையும் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி. வெளிநாட்டு வீரர்களாக பூரன், மார்க்ரம், யான்சென் உள்ளிட்ட வீரர்களை எடுத்தது. மற்ற அணிகளை போன்று கண்மூடித்தனமாக பெரிய வீரர்களை நோக்கி ஓடவில்லை சன்ரைசர்ஸ் அணி.
ஆனால் இந்த சீசனின் முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளிடமும் தோல்வியடைந்தது சன்ரைசர்ஸ் அணி. சன்ரைசர்ஸ் அணி சரியாக ஆடாதபோது, அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் முகம் சோர்ந்து போயிருந்ததை கண்டு ரசிகர்கள் வேதனையடைந்தனர். காவ்யா மாறனின் சோகமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அவருக்காக ரசிகர்களும் வருத்தப்பட்டனர்.
ஆனால் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3வது போட்டியில் சிஎஸ்கேவையும், 4வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸையும் வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்று வெற்றிப்பயணத்தை சன்ரைசர்ஸ் அணி தொடங்கியிருப்பதால் காவ்யா மாறன் மகிழ்ச்சியில் உள்ளார்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான வெற்றியை கண்டு சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மகிழ்ச்சியடைந்து முகத்தில் சிரிப்புடன் வெற்றியை கொண்டாடிய வீடியோ டுவிட்டரில் வைரலாகிவருகிறது. அவர் முகத்தில் சிரிப்பை கண்ட ரசிகர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.