பரபரப்பான இறுதி போட்டி.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற எசெக்ஸ் அணி.. வீடியோ

By karthikeyan VFirst Published Sep 22, 2019, 3:48 PM IST
Highlights

டி20 பிளாஸ்ட் இறுதி போட்டியில் வோர்செஸ்டெர்ஷைர் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது எசெக்ஸ் அணி. 

டி20 பிளாஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் எசெக்ஸ் அணியும் வோர்செஸ்டெர்ஷைர் அணியும் மோதின. 

பர்மிங்காமில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வோர்செஸ்டெர்ஷைர் அணி, 20 ஓவர் முடிவில் 145 ரன்கள் அடித்தது. கோப்பையை வெல்ல 146 ரன்கள் என்ற இலக்குடன் எசெக்ஸ் அணியின் தொடக்க வீரர் டெல்போர்ட் ஒரு ரன்னிலும் ஆடம் வீட்டர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் டாப் ஆர்டர் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரரான டாம் வெஸ்ட்லி பொறுப்புடன் ஆடி, 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் நன்றாக ஆடிய லாரன்ஸ் உட்பட ஒரு சில விக்கெட்டுகள் விழுந்தன. ரவி போபாரா அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்க, 19வது ஓவரின் 4வது பந்தில், பால் வால்ட்டர் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரவி போபாராவுடன் நெருக்கடியான சூழலில் கேப்டன் சைமன் ஹார்மர் ஜோடி சேர்ந்தார். களத்திற்கு வந்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ஹார்மர், அந்த ஓவரின் கடைசி பந்தில் சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை தன்னிடமே வைத்துக்கொண்டார். 19 ஓவர் முடிவில் எசெக்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்திருந்தது. வெற்றிக்கு, கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 

இரு அணிகளுக்குமே மிகவும் நெருக்கடியான நிலை அது. அந்த ஓவரை வோர்செஸ்டெர்ஷைர் அணி சார்பில் பர்னெல் வீசினார். முதல் பந்தில் ஹார்மர் சிங்கிள் தட்ட, இரண்டாவது பந்தில் ரவி போபாராவும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். முதல் இரண்டு பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டதால், கடைசி 4 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. மூன்று மற்றும் நான்காவது பந்துகளில் தலா 2 ரன்கள் அடித்தார் ஹார்மர். அதனால் 2 பந்துகளில் 4 ரன்கள் கிடைத்தது. முதல் நான்கு பந்துகளில் 6 ரன்கள் எடுக்கப்பட்டதை அடுத்து கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 

Two last-ball finishes in a day, what a way to end ! pic.twitter.com/3C9SU4jxEO

— ESPNcricinfo (@ESPNcricinfo)

ஆட்டம் மிகவும் விறுவிறுப்படைந்தது. உச்சகட்ட நெருக்கடி வாய்ந்த அந்த நிலையில், ஐந்தாவது பந்தை பர்னெல் வீச, அதை அபாரமான ஷாட்டின் மூலம் பவுண்டரிக்கு அனுப்பிய ஹார்மர், கடைசி பந்தில் 2 ரன்கள் அடித்து த்ரில் வெற்றி பெற செய்தார். 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற எசெக்ஸ் அணி டி20 பிளாஸ்ட் கோப்பையை வென்றது. கடைசி நேரத்தில் களத்திற்கு வந்து வெறும் 7 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 18 ரன்களை குவித்து எசெக்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த அந்த அணியின் கேப்டன் ஹார்மர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

click me!