
England Won First Test Match Against India: லீட்ஸில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்பு தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 364 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.
பென் டக்கெட் சூப்பர் சதம்
5ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது முதல் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். முதலில் நிதானமாக விளையாடிய இவர்கள் பின்பு அதிரடியாக ஆடத் தொடங்கினார்கள். தொடக்க வீரர் பென் டக்கெட் இந்திய பாஸ்ட் பவுலர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி பவுண்டரிகளாக விளாசினார். மேலும் ஜடேஜாவின் ஓவரிலும் ரிவர்ஸ் ஸ்விப்கள் மூலம் பவுண்டரிகளை ஓட விட்ட அவர் ஒரு சிக்சரையும் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் சூப்பர் சதம் விளாசினார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய க்ரோலி அரை சதம் அடித்தார்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்
இந்திய கேப்டன் சுப்மன் கில் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா என அனைத்து பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 188 ரன்கள் சேர்த்த நிலையில், 65 ரன்கள் எடுத்திருந்த க்ரோலி பிரசித் கிருஷ்ணா பந்தில் கேட்ச் ஆனார். பின்பு வந்த ஆலிப் போப்பும் (8 ரன்) பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்டானார். இதன்பிறகு ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்து போட்டியை பரபரப்பாக்கினார். அதாவது அதிரடி சதம் விளாசிய பென் டெக்கெட் 170 பந்துகளில் 21 பவுண்டரி, 1 சிக்சருடன் 149 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்தில் மாற்று வீரர் நிதிஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் ஆனார்.
பென் ஸ்டோக்ஸ் அவுட்
அதற்கு அடுத்த பந்தில் ஹாரி ப்ரூக்கும் (0) பண்ட்டிடம் கேட்சாகி நடையை கட்டினார். அப்போது இங்கிலாந்து அணி 253/4 என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு ஜோ ரூட்டும், கேப்டன் பென் ஸ்டோக்சும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடினார். ஓரளவு நன்றாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 33 ரன்னில் தேவையில்லாமல் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்விப் ஷாட் விளையாடி ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார்.
ஜோ ரூட், ஜேமி ஸ்மித் சிறப்பான ஆட்டம்
அப்போது இங்கிலாந்தில் ஸ்கோர் 302/5 என்ற நிலையில் இருந்தது. வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்டதால் மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றி பெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஜோ ரூட்டும், ஜேமி ஸ்மித்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கினார்கள். மிகவும் சாதுர்யமாக விளையாடிய இருவரையும் இந்திய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. மிகச்சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் முக்கியமான கட்டத்தில் அரை சதம் விளாசினார்.
இங்கிலாந்து அணி வெற்றி
தொடர்ந்து வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜாவின் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, 2 சிக்சர் விளாசிய ஜேமி ஸ்மித் அணியை வெற்றி பெறச் செய்தார். இங்கிலாந்து அணி 82 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் 62 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 149 ரன்களும் விளாசிய பென் டக்கெட் ஆட்டநாயகன் விருது வென்றார். 19 ஓவர் வீசிய பும்ரா 57 ரன் விட்டுக்கொடுத்து எந்த விக்கெட்டையும் வீழ்த்தவில்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகி விட்டது.